தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் கோலாகலம்
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், வானவேடிக்கையுடன் நள்ளிரவில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
வடக்கே காசி, தெற்கே தென்காசி எனப் போற்றப்படும் தென்காசி மாவட்ட நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26ஆம் தேதி காலை உலகம்மன் சன்னதியில் எதிரே உள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றதுடன், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 11 ஆம் நாள் திருக்கல்யாண வைபவம் இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு மேல் 12.30 க்குள் உலகம்மன் சன்னதி எதிரே அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச வாத்தியங்கள் இசைக்க, சங்கொலி மற்றும் வானவேடிக்கையுடன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் கட்டளைதாரர்களும் செய்திருந்தனர்.