உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவ கொடியேற்றம்

மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவ கொடியேற்றம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.


மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி 30 நாட்கள் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம் இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 18ம் தேதி துலா மாத பிறப்பு தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. இதில் கடைசி 10 நாள் விழா கொடியேற்றப்பட்டு மிகவும் விமர்சையாக நடக்கும். அதன்படி இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனையொட்டி இன்று திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் சுவாமி கோயிலில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெரியகொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில்  பஞ்சமுக கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சுவாமி, அம்பாள் உள்பட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் சிவபுரம்வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 


இதேபோல் அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் கோவில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் கோயில், படித்துறை காசி விஸ்வநாதர், தெப்பக்குளம் விசாலாட்சி சமேத காசிவிஸ்நாதர் சுவாமி கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடந்தது. இதில் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், அன்பேசிவம் அறக்கட்டளை தலைவர் பாலச்சந்திரசிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !