உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவக்கம்

மருதமலையில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவக்கம்

மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.


முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கருதப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும், வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா, தைப்பூசம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் இன்று வெகுசிறப்பாக துவங்கியது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. 5:30 மணிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 7:30 மணிக்கு, விநாயகர் பூஜை, புண்ணியாகம், பஞ்சகவ்யம், இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், யாகசாலை பூஜை நடந்தது. காலை, 09:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சுப்பிரமணிய சுவாமி, விநாயகர், வீரபாகு, சூலத்தேவர், உற்சவ பெருமான், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. அதன் பின், கால சந்தி பூஜையும் நடந்தது. தொடர்ந்து, சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கையில் காப்பு கட்டப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, உச்சிக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி, கேடயம் வாகனத்திலும், மாலையில், கற்பக விருட்சம் வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கந்த சஷ்டி துவக்க விழாவையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், அடிவாரம் மற்றும் மலைமேல் உள்ள கார்பார்க்கிங் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும், 15ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, சூரசம்ஹாரமும்; 16ம் தேதி, காலை, 9:00 முதல் 10:30 மணிக்குள், திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !