உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத அடையாளங்களுடன் முஸ்லிம் பெண் சாமி தரிசனம் திருச்செந்துார் கோவிலில் சர்ச்சை

மத அடையாளங்களுடன் முஸ்லிம் பெண் சாமி தரிசனம் திருச்செந்துார் கோவிலில் சர்ச்சை

துாத்துக்குடி: திருச்செந்துார் கோவிலுக்குள் முஸ்லிம் மத அடையாளங்களுடன் பெண் ஒருவர் தரிசனம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், உறுதி மொழி படிவத்தில் கையெழுத்திடாமல் தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடுத்த முறை அவர் ஆகம விதிகளின் முறைப்படி உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு சென்று தரிசனம் செய்தார். இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள ஆகம கோவில்களில், ஹிந்து அல்லாத நபர்கள் ஆகம விதிகளின் படி உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் இடாமல் கொடிமரத்தை தாண்டி செல்வதை தடுக்க வேண்டும்; அவர்களை உள்ளே நுழைய அனுமதித்தால் கோவிலின் புனித்தன்மையை சீர்குலைக்கும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், திருச்செந்துார் கோவிலில் முஸ்லிம் மத அடையாளங்களுடன் பெண் ஒருவர் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


பக்தர்கள் கூறியதாவது: முஸ்லிம் மத அடையாளத்துடன் தரிசனத்திற்கு சென்ற பெண்ணிடம், திருச்செந்துார் கோவிலில் உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் பெறாமல் அறநிலைத்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டனர். திருச்செந்துார் கோவிலில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. நீதிமன்ற உத்தரவின்படியும், ஆகம விதிமுறைகளின்படியும் அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். திருச்செந்துார் கோவில் இணை கமிஷனர் அருணாச்சலத்திடம் விளக்கம் கேட்க பல முறை மொபைல் போனில் தொடர்பு கொண்ட போதும், அவர் அழைப்பை ஏற்கவில்லை. திருச்செந்துார் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருவது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !