உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்த சஷ்டி விரதம் யார் இருக்கலாம்.. யாருக்கு எச்சரிக்கை தேவை?

கந்த சஷ்டி விரதம் யார் இருக்கலாம்.. யாருக்கு எச்சரிக்கை தேவை?

முருகப் பெருமானை முன்னிறுத்தி கொண்டாடப்படும் முக்கியமான திருவிழா கந்த சஷ்டி. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா போன்ற தமிழர் அதிகம் வாழும் நாடுகளிலும் இந்துக்கள் 6 நாட்கள் விரதம் இருந்து கந்த சஷ்டி கொண்டாடுகின்றனர். 


சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி கோயில் ஓதுவார் கண்ணப்பன் சொல்கிறார்...


ஐப்பசி மாத அமாவாசைக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது. அந்தந்த வட்டார மரபுகளுக்கு ஏற்ப காப்பு அணிதல், கொடியேற்றம் போன்றவற்றுடன் விழா தொடங்குகிறது. ஆறாம் நாள் சூரசம்ஹாரத்துடன் விரதம் முடிகிறது. சிலர் மறுநாள் நடக்கும் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பார்த்த பின் விரதம் முடிப்பார்கள். விரதம் இருக்கும் ஆறு நாளும் வழக்கமான உணவு சாப்பிடுவது கிடையாது. டீ காபி கிடையாது. பால், மோர், இளநீர் அல்லது பழச்சாறு அருந்துகின்றனர். பலர் பழங்கள் மட்டும் சாப்பிடுவார்கள். வாழைப்பழம் தான் முதலிடம். ஒருவேளை மட்டும், அநேகமாக மதியம், பால் சாதம் சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதம் மட்டும் சாப்பிடுபவர்கள் உண்டு. விரதத்தின் ஆறாவது நாளில் முருகப் பெருமான் சூரபத்மனை வெல்லும் நிகழ்வே சூரசம்ஹாரமாக கொண்டாடப்படுகிறது. கந்தபுராண மரபின்படி, சூரபத்மன் சேவலாகவும் மயிலாகவும் மாறி முருகப் பெருமானின் கொடியாகவும் வாகனமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டான். தீய குணங்களும் ஆணவமும் இறையருளால் அடக்கப்படுவதன் அடையாளமாக இந்த சம்ஹாரம் நடக்கிறது. அதன் பின முருகப் பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம். கந்த சஷ்டியின்போது சிறப்பு அபிஷேகங்கள், சண்முகார்ச்சனை, கலசாபிஷேகம், திருப்புகழ் பாராயணம், கந்தர் கலிவெண்பா பாராயணம் உள்ளிட்ட வழிபாடுகள் நடக்கின்றன. இப்படித்தான் விரதம் இருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் எதுவும் இல்லை. அதனால், அவரவர் சூழ்நிலைக்கு தக்கபடி பல விதமாக விரதம் இருக்கின்றனர். தமிழ் மரபுப்படி நீர் ஆகாரத்துடன் இருக்கும் விரதத்தையே பெரும்பாலான மக்கள் பின்பற்றுகின்றனர். உடல் நலம் இல்லாதவர்களும், நோயாளிகளும் டாக்டரின் அறிவுரை கேட்ட பின் சஷ்டி விரதம் குறித்து முடிவு செய்ய வேண்டும், என்கிறார் கண்ணப்பன்.


டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள்?: விரதம் இருப்பது பொதுவாக நல்ல விஷயம் தான். உடலுக்கு ஓய்வு அளிக்கும்போது, உடல் உறுப்புகளில் சீரமைப்பு பணிகள் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆட்டோஃபேஜி என்று இதை சொல்வோம். இதை கண்டுபிடித்த விஞ்ஞானிக்கு 2016ல் நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விரதம் என்பது எந்த மருத்துவ சிகிச்சைக்கும் மாற்றாக அமையாது என்பதை பக்தர்கள் புரிந்துகொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளும் கால இடைவெளியை அதிகரிக்கும்போது, சிலரின் உடல் எடை மற்றும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால், அதன் விளைவுகள் உடல்நிலை மற்றும் விரத முறையை பொறுத்து மாறுபடும். விரதம் இருக்கும்போது நீர்ச்சத்து மிகவும் முக்கியம். கண்டிப்பாக தண்ணீர் அல்லது இளநீர் அல்லது எலுமிச்சையும் உப்பும் கலந்த சாறு குடிக்க வேண்டும். இது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால், பொதுவான நிலைப்பாட்டை எடுக்க இயலாது என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.


சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், வலிப்பு நோய், கடுமையான சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் மருத்துவ ஆலோசனை பெறாமல் கடுமையான விரதம் இருக்கக் கூடாது. அதே போல, கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்பவர்கள் சஷ்டி விரதம் இருப்பதும் நடைமுறைக்கு ஒத்துவராது. குறைந்த உடல் உழைப்பு உள்ள பணிகளில் இருப்பவர்கள் மட்டுமே இதை பின்பற்றலாம் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !