உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவிலிமேடு ராமானுஜர் கோவிலை புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

செவிலிமேடு ராமானுஜர் கோவிலை புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: சிதிலமடைந்த நிலையில் உள்ள காஞ்சிபுரம் செவிலிமேடு, சாலை கிணறு ராமானுஜர் கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம் செவிலிமேடு, சாலை கிணறு ராமானுஜர் கோவில், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில், பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இக்கோவிலில் நடைபெறும் அனுஷ்டான குளம் உத்சவத்தின்போது, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வேடுவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ராமானுஜர் அவரித்த திருவாதிரை நட்சத்திரைத்தையொட்டி, மாதந்தோறும் திருவாதிரை திருநட்சத்திர தினத்தன்று, சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற ராமானுஜர் கோவில் சுற்றுச்சுவரில் செடிகள் வளர்ந்து, மழைக்கும் ஒழுகும் நிலையிலும், கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையிலும் உள்ளன. எனவே, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.


இக்கோவிலை புனரமைக்க முடிவு செய்த, ஹிந்து சமய அறநிலையத்துறையினர், 2024 ஆண்டு ராமானுஜர் கோவிலில் சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து, திருப்பணிக்கான மதிப்பீடு செய்தனர். ஆய்வுப்பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை திருப்பணி தொடங்கப்படவில்லை. வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்படும் பல்வேறு கோவில்களில் பாலாலயம் நடத்தப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், செவிலிமேடு ராமானுஜர் கோவில் திருப்பணி தொடங்கப்படாமல் உள்ளது. எனவே, செவிலிமேடு ராமானுஜர் கோவிலை புனரமைத்து, கும்பாபி ேஷகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில் திருப்பணிக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில், திருப்பணி தொடங்கப்பட உள்ளது,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !