ஸ்ரீபாங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
படப்பை: ‘ஸ்ரீபாங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன்’ கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது.
படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி கிராமத்தில், ‘ஸ்ரீபாங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன்’ கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவேங்கடமுடையான், மஹாகணபதிக்கு சன்னதிகளும் உள்ளன. ஆகமவிதிப்படி இக்கோவில், அண்மையில் புனரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோவிலின் ‘சம்ப்ரோஷணம்’ எனும் மஹா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. இன்று வாஸ்து ஹோமம், அக்னி பிரதிஷ்டை, சயனாதிவாசம் பூர்ணாஹூதி சாற்றுமுறை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளன. நாளை காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம் பூஜை, கும்பதிருவாராதனம், ஹோமம், 8:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 8:45 மணிக்கு கும்ப புறப்பாடு, 9:30 மணிக்கு மேல் மஹா சம்ப்ரோஷணம் எனும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உத்சவமும் நடைபெற உள்ளது.