ராமாயணம்’ படத்தால் உலகப் புகழ் பெற்ற ஜடாயு சிற்பம்: பக்தர்கள், பயணிகளை ஈர்க்கும் கேரள அதிசயம்!
கேரளாவின் கொடுங்களூர் அருகே ஜடாயுமங்கலம் என ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் ஜடாயுவுக்கு மிகப்பெரிய நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கும் ஜடாயுவுக்கும் என்ன சம்பந்தம்? ராமாயண காலத்தில், ராவணன், சீதையை தூக்கிச் சென்றதைப் பார்த்த ஜடாயு சீதையை விடுவிப்பதற்காக ராவணனுடன் சண்டையிடுகிறது! ஒரு கட்டத்தில், ராவணன், பறவையின் இறக்கைளை வெட்டி விட; அந்தப் பறவை இந்த மலையின் மீது விழுந்து குற்றுயுருடன், ராமனின் வருகைக்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படுத்திருந்தது! எண்ணம் போலவே ராமன் - லட்சுமணர்கள் வர அவர்களிடம் நடந்ததைக் கூறி, சீதை இலங்கைக்கு ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு விட்டாள் என்ற உண்மையையும் கூறி தன் உயிரை விடுகிறது! இதன் அன்பை உணர்ந்து கொண்ட ராமன், அதற்கு, தன் தந்தைக்குச் செய்வது போன்ற கர்மகாரியங்களைச் செய்து முடிக்கிறார். ஆக ஜடாயு விழுந்து உயிரை விட்ட ஊர் என்பதால் ஜடாயு மங்கலம் என பெயர் பெற்றது! (இப்படி ஜடாயு மோட்சம் அடைந்ததாகப் பல ஊர்கள் சொல்லப்படுகின்றன).
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் வந்த ‘ராமாயணம்: பாகம் 1’ திரைப்படத்தில், ராவணனின் புஷ்பக விமானத்தில் இருந்து சீதையை மீட்க ஜடாயு போராடும் காட்சி பிரமாண்டமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கேரள மாநிலம் சடயமங்கலத்தில் அமைந்துள்ள ஜடாயு எர்த் சென்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் மிகப்பெரிய பறவைச் சிற்பம்: சடயமங்கலத்தில் (ஜடாயுமங்கலம்) உள்ள பிரம்மாண்டமான பாறை மலையின் மீது, சுமார் 200 அடி பரப்பளவில் ஜடாயு சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் அஞ்சல் வடிவமைத்த இந்தச் சிற்பம், உலகின் மிகப்பெரிய பறவைச் சிற்பமாகப் புகழ்பெற்றுள்ளது. திரைப்படத்தில் இடம்பெற்ற ராவணன் - ஜடாயு போர்க் காட்சிக்கும், நிஜத்தில் அமைந்துள்ள ஜடாயு சிற்பத்துக்கும் இடையிலான ஒப்பீடுகள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் வீடியோக்கள், மீம்ஸ்கள் எனப் பல்வேறு தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால், இந்தச் சுற்றுலாத் தலத்தின் மீதான ஆர்வம் உலக அளவில் அதிகரித்துள்ளது.
அரசியல் பிரமுகர்களும், பிரபல சமூக வலைதளப் படைப்பாளர்களும் இந்த இடத்தின் புகழைப் பரப்பி வருகின்றனர். இங்குள்ள கேபிள் கார் பயணம், மலை உச்சியிலிருந்து தெரியும் அழகிய சூரிய அஸ்தமனக் காட்சி, பிரம்மாண்டமான கட்டமைப்பு ஆகியவற்றை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்களது வீடியோக்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு: தற்போது தினமும் சராசரியாக 2,500 பேர் ஜடாயு எர்த் சென்டருக்கு வருகை தருகின்றனர். சுற்றுலா உச்சக்கட்ட காலங்களில் இந்த எண்ணிக்கை 5,000 ஆக அதிகரிக்கிறது. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் சுமார் 90 சதவீதம் பேர் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திரைப்படம் தொடர்பான சமூக வலைதளப் பதிவுகளால் விசாரணைகள் மற்றும் முன்பதிவு ஆர்வம் பெருமளவில் அதிகரித்துள்ளன. எனினும், பயணத் திட்டங்களை முன்கூட்டியே வகுக்க வேண்டியிருப்பதும், பண்டிகைக் காலங்களில் விமானக் கட்டணங்கள் அதிகரிப்பதும் உடனடி சுற்றுலாப் பயணிகள் வருகை உயர்வுக்கு தடையாக உள்ளன.
இதுகுறித்து ஜடாயு எர்த் சென்டர் தலைமைச் செயல் அதிகாரி தீபக் சுனில் கூறுகையில், இணையத்தில் கிடைத்துள்ள இந்தப் பிரபலத்தால் எதிர்காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். வசதிகளை மேம்படுத்தத் திட்டம்: எதிர்பாராத அளவுக்கு உலகளாவிய கவனம் கிடைத்துள்ளதால், அதிகரிக்கக்கூடிய சுற்றுலாப் பயணிகள் வருகையைச் சமாளிக்க நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அதிக அளவில் வருபவர்களுக்குத் தேவையான கூடுதல் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சுற்றுலா ஆர்வம் சடயமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பொருளாதாரத்துக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் தங்கும் விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் இதன் மூலம் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சடயமங்கலம் ஊராட்சித் தலைவர் கூறுகையில், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ஊராட்சி தயாராக உள்ளது. ஜடாயு எர்த் சென்டர் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி, போக்குவரத்து உள்ளிட்ட சில நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்ட பின்னர், சுற்றுலாப் பயணிகளின் வருகையைச் சமாளிக்க முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார். ‘ராமாயணம்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவில் கவனம் பெற்றுள்ள ஜடாயு சிற்பம், வரும் சுற்றுலாப் பருவத்தில் கேரளாவின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராவணனுடன் போராடி தன் சிறகுகளை இழந்த ஜடாயுவின் தியாகத்தையும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்தையும் இது நினைவுகூருகிறது.