உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்!

ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்!

மொழி, இனம், கலாசாரம், உணவு, போன்ற விஷயங்களில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும், பிரிந்து கிடந்தாலும், ஒரு சில நடைமுறைகள், பழக்க வழக்கங்களில், சில நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருப்பது, ஆச்சரியமான விஷயம் தான்.
நம் நாட்டில், முன்னோரை வணங்கி, அவர்களின் ஆசியை பெறும் வகையில், குறிப்பிட்ட நாட்களில் அல்லது அவர்கள் இறந்த நாட்களில், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வைத்து, படையலிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதேபோல், ஒவ்வொரு மனிதரும், இறப்புக்கு பின், அவர்கள் செய்த பாவம், புண்ணியத்துக்கு தகுந்தாற்போல், சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ செல்வர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. இதே நடைமுறையும், நம்பிக்கையும், சீனாவிலும் பின்பற்றப்படுகிறது என்பது தான், ஆச்சரியமான விஷயம். ஆனால் இதையே, அவர்கள் சற்று வித்தியாசமான முறையில் பின்பற்றுகின்றனர். இறப்புக்கு பின், ஒவ்வொரு மனிதரின் ஆவியும், பாதாள <உலகத்துக்கு செல்கிறது. பூமியில் வாழும்போது, பாவம் செய்தவர்களுக்கு, பாதாள உலகில், மரணக் கடவுள் (நம்ம ஊர் எமன் போன்றவர்) தண்டனை வழங்குகிறார்.

இந்த தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமானால், மரண கடவுளுக்கு, பணமும், பொருளும் கொடுக்க வேண்டும். பாதாள உலகத்தில் ஏது, பணமும், பொருளும்? இதனால், இறந்தவர்களின் உறவினர்கள், ஒரு குறிப்பிட்ட நாளில், தீயை மூட்டி, அதற்குள் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகளையும், பொருட்களையும் வீசி எறிகின்றனர். இப்படி, தீக்குள் வீசி எறியப்படும் ரூபாய் நோட்டுகளும், பொருட்களும், பாதாள உலகத்தில் உள்ள, ஆவிகளுக்கு போய் சேரும் என்றும், ஆவிகள், அந்த பணத்தை, மரணக் கடவுளுக்கு கொடுத்து, தண்டனையிலிருந்து தப்பிக்கும் என்றும், சீன மக்களில் ஒரு தரப்பினர் நம்புகின்றனர். மற்றொரு தரப்பினரோ, "வாங்கிய கடனை அடைக்க முடியாமல், இறந்தவர்களுக்கு, பாதாள உலகத்தில், கட்டாயம் தண்டனை உண்டு. இந்த கடனை அடைப்பதற்காகவே, இறந்தவர்களுக்காக, தீக்குள், ரூபாய் நோட்டுகளையும், பொருட்களையும் வீசுகிறோம்... என்கின்றனர். சீனாவின் பல பகுதிகளிலும், இந்த விசித்திர நடைமுறை பின்பற்றப்படுகிறது. துவக்கத்தில், உண்மையான ரூபாய் நோட்டுகளையும், பொருட்களையும், தீக்குள் வீசி எறிந்த சீன மக்கள், இப்போது, ரூபாய் நோட்டு போல அச்சிடப்பட்ட காகிதங்களையும், போலியாக செய்யப்பட்ட பொருட்களையும் வீசி எறியத் துவங்கியுள்ளனர். இறந்த முன்னோரின் ஆவிகளை, சாந்தப்படுத்தி, சந்தோஷமாக வைத்திருந்தால் தான், நாம் சந்தோஷமாக வாழ முடியும். இதனால் தான், கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறோம்... என்கின்றனர், சீன மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !