கும்பம் : கார்த்திகை ராசி பலன்
கும்பம்
அவிட்டம் 3, 4 ம் பாதம்
எந்த ஒன்றாக இருந்தாலும் அதில் போராடி வெற்றிபெறக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் தைரிய வீரிய காரகன் செவ்வாயும், தன புத்திரக் காரகன் குருவும் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கின்றனர். இதனால் உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகள் போராட்டங்கள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். தவறான நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்லக்கூடிய நிலை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்துசேரும். வருமானம் பலவழியிலும் வர ஆரம்பிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள், வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் மரியாதை கூடும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் கூடும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
சந்திராஷ்டமம்: டிச. 2, 3.
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18, 26, 27. டிச. 8, 9.
பரிகாரம்: செந்தில் ஆண்டவனை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
சதயம்
எந்த நிலையிலும் எடுத்த வேலையை முடிப்பவரான உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதமாகும். ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி எதிர்ப்பு போன்றவற்றை இல்லாமல் செய்வார். வழக்கு விவகாரங்களை சாதகமாக்குவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை இல்லாமல் செய்வார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். நீண்டநாள் கனவு நனவாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி தேடிவரும். கையில் பணம் புரளும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி புதன் நவ. 30 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சப்தம குருவின் பார்வைகளால் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தைரியம் அதிகரிக்கும். எடுத்த வேலையை முடித்திடக்கூடிய நிலை உருவாகும். பெண்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். மகிழ்ச்சியான நிலை இருக்கும் விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: டிச. 3.
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 22, 26. டிச. 4, 8, 13.
பரிகாரம்: ஆண்டாள் அழகரை வழிபட நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்
தன புத்திரக் காரகனின் அருள் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கிறார். இதனால் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பம் தொழில் உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். செல்வாக்கு மிக்கவராக நடை போடக்கூடிய நிலை உருவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களும் இக்காலத்தில் உங்களிடம் வந்து சமாதானம் பேசுவர். உங்கள் சப்தமாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பட்டம் பதவி என்ற கனவு நனவாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு தலைமையின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். தைரியக்காரகன் செவ்வாயும் ராசியைப் பார்ப்பதால் தைரியமுடன் செயல்படக்கூடிய நிலை உண்டாகும். உங்கள் பாக்கியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். குடும்பத்திலும் மகிழ்ச்சியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும் சிலருக்கு புதிய சொத்து சேரும். செய்துவரும் தொழிலில் இருந்த தடை விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும் என்றாலும், வீண் செலவுகளை குறைத்துக் கொள்வதும் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் நன்மையாகும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 4.
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 21, 26, 30. டிச. 3, 8, 12.
பரிகாரம்: மணக்குள விநாயகரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடம் நீங்கும்.