உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேல் வாங்கிய முருகப்பெருமானுக்கு மானிடரை போல் வியர்த்த ‘மகிமை’ சிக்கல் கோவிலில் பக்தர்கள் பரவசம்

வேல் வாங்கிய முருகப்பெருமானுக்கு மானிடரை போல் வியர்த்த ‘மகிமை’ சிக்கல் கோவிலில் பக்தர்கள் பரவசம்

நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில், கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் போது, முருகப்பெருமானின் மேனியெங்கும் வியர்த்த மகிமை நடந்தது.


நாகை மாவட்டம், சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில்தான் முருகப்பெருமான், அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.


இக்கோவிலில் கந்தசஷ்டி விழா, கடந்த 10 ம் தேதி துவங்கியது. நாள்தோறும் ஆட்டு கிடா, தங்கமயில், ரிஷபம் போன்ற பல்வேறு வாகனங்களில், முருகப்பெருமான் தேவியர்களுடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கந்த சஷ்டியின் 5ம் நாள் விழாவான நேற்று அதிகாலை முருகப்பெருமான் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.


திருச்செந்தூரில் நாளை சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, நேற்றிரவு அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருத்தேரில் வீதியுலா வந்த முருகப்பெருமான், ஆவேசத்துடன் கோவிலுக்குள் வந்து அன்னையிடம் சக்திவேல் வாங்கும் போது ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். அன்னையிடம் சக்திவேலை பெற்று தனது சன்னதியில் அமர்ந்த முருகப்பெருமானுக்கு, மனிதர்களுக்கு வியர்ப்பது போல் திருமேனியெங்கும் வியர்க்கும் மகிமை நடந்தது. முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கிக் கொள்ள இயலாமல், சன்னதியின் சுவர்களிலும் வேர்வை துளிகள் அரும்பியிருந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !