மயிலாடுதுறை மாவட்ட முருகன் கோயில்களில் சூரசம்ஹாரவிழா
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவில், திருவிடைகழி முருகன் கோயில் உட்பட பல்வேறு முருகன் கோயில்களில் சூரசம்ஹாரவிழா
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சந்திதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி (முருகப்பெருமான்) அருள்பாலிக்கிறாா். இக்கோயில் நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கி வருகிறது.இக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 10ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் விழா நேற்று நடந்தது. அதனையொட்டி செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. செல்வமுத்துக்குமாரசுவாமி தங்க கொடிமரம் முன் எழுந்தருளி வைத்தியநாத சுவாமியிடம் இருந்து சூரனைவதம் செய்ய வேல் வாங்கும் ஐதீகம் நடைபெற்றது. தொடா்ந்து, முருகப் பெருமான் அம்மனை வழிபட்டு, தங்க மயில் வாகனத்தில் மேற்குகோபுரவாசல் வழியாக எழுந்தருளி தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் முன்னிலையில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரவிழா நடந்தது. இதேபோல் மயிலாடுதுறை வதானேஸ்வரர் கோயிலில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் முன்னிலையில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரவிழா நடந்தது. மாயூரநாதர் சுவாமி கோயிலில் உள்ள தருமபுரம் குமரக்கட்டளை மற்றும் திருவிடைகழி சுப்ரமணியசுவாமி கோவில், பெரம்பூர் முருகன் கோவில் கோயில்களில் சூரசம்ஹாரவிழா சிறப்பாக நடைபெற்றது.