திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்: சுப்பிரமணியர் தெய்வானை மாலை மாற்றும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார லீலை இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 10ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுப்பிரமணிய சுவாமி, கோவர்த்தனாம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார லீலை இன்று நடைபெற்றது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்திலும், வீரபாகுத் தேவர் வெள்ளைக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் மேலரத வீதி, கீழரத வீதி வழியாக சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு எழுந்தருளி, அசுரனான பத்மாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து தெய்வானை அம்மனுடன் சுப்பிரமணிய சுவாமி பூச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கந்தசஷ்டி விழாவின் ஏழாம் நாளான நாளை காலை 8 மணிக்கு மயில் வாகனத்தில் சிறிய சட்டத் தேரில் தெய்வானை அம்மனுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி ரத வீதி மற்றும் கிரி வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 3 மணிக்கு மூலவரான சுப்பிரமணியருக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.