தமிழகம் முழுவதும் கோவில்களில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் கோலாகலம்
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடந்தது. கந்த சஷ்டி ஆறாம் நாள் விழா முன்னிட்டு கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி மூலவர் உற்சவர் மற்றும் 108 சங்குகளுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் கலசத்திலிருந்து புனித நீர் ஊற்றி மகா தீப ஆராதனை நடந்தது. யாகசாலை பூஜை மற்றும் அபிஷேகங்களை ரவி குருக்கள் செய்திருந்தார்.
விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சுற்று பகுதி முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயிலில் சஷ்டி நிகழ்வின் கடைசி நாளான சூர சம்ஹாரத்தை முன்னிட்டு முருகன், சோமாஸ் கந்தருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. மாலை 6 மணிக்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி கோயில் வளாகம் முன்பு மைதானத்தில் நடந்தது. சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் நிகழ்வை நேரில் கண்டு களித்தனர். இதேபோல் தேவதானம் முருகன் கோயில், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் நிகழ்ச்சி, வழிபாடு நடந்தது.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் காலையில் சுப்பிரமணியசாமிக்கு சஷ்டி பாராயண வழிபாடும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. நேற்று காலை சுப்பிரமணியர், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் வெள்ள விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அங்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சஷ்டி பாராயண வழிபாடு நடந்தது. பின்னர் மாலையில் முத்தாலம்மன் பஜாரில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பல்வேறு உருவத்தில் வந்த சூரபத்மனை முருகப்பெருமான் வேல் கொண்டு குத்தி அழித்தார். அப்போது பக்தர்கள் அரோகரா கோசமிட்டும், குலவையிட்டும் ஆரவாரம் செய்தனர். பின்னர் வீதியுலா எழுந்தருளிய முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர். வத்திராயிருப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் நடந்த சூரசம்கார நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். பின்னர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
* பழனியாண்டவர் கோயில், வழிவிடு முருகன் கோயில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்த முருகன் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சின்னதடாகம்
பெரியதடாகத்தில் உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார பெரு விழா பக்தர்கள் சூழ கோலாகலமாக நடந்தது. நவ.,10 ல் விநாயகர் பூஜை, கங்கணம் கட்டும் நிகழ்ச்சியோடு துவங்கியது. நேற்று காலை விநாயகர் பூஜை, அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. மாலை, 5 மணிக்கு சூரசம்ஹாரம் கோயில் வளாகத்தில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார்.வேல்வாங்கும் நிகழ்வு, சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 9 மணிக்கு சுவாமிக்கு மஹா அபிஷேகமும் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.
காரமடை குருந்தமலை
காரமடை குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா 10-ம் தேதி காப்புக்கட்டுடன் துவங்கியது. நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வேலாயுதசுவாமி, சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
சென்னியாண்டவர் கோயில்
கருமத்தம்பட்டி விராலிக்காடு சென்னியாண்டவர் கோயிலில், காலை சத்ரு சம்ஹார வேள்வி நடந்தது. 11 மணிக்கு, அபிஷேகமும், 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 4 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும், சூரசம்ஹாரமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சென்னியாண்டவரை வழிபட்டனர்.
தென்சேரிமலை மந்திர கிரி வேலாயுத சுவாமி கோயில், குமரன் கோட்டம் சுவாமிநாத சுவாமி கோயில், சூலூர் சிவன் கோயில், பொன்னாண்டாம் பாளையம், செங்கத்துறை, காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோயில், கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் கோயிலில் நடந்த கந்த சஷ்டி விழாவில்,திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மன்னீஸ்வரர் கோயில்
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் நேற்று காலை வள்ளி தெய்வானை உடனமர் முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. மாலையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
குன்னத்தூர்புதூர்
பழனி ஆண்டவர் கோயிலில் கடந்த ஆறு நாட்களாக காலையில் பழனி ஆண்டவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று பழனி ஆண்டவருக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சோழவந்தான்
சோழவந்தான் வட்டார கோயில்களில் சூரசம்ஹாரம் விமரிசையாக நடந்தது. திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் விநாயகர், ஏலவார்குழலி அம்மன், முருகன் நான்கு ரத வீதிகளில் பவனி வந்தனர். கோயில் முன் அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து முருகன் சூரபத்மனை வதம் செய்தார். வேலுக்கு மரியாதை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பரசுராம், கணேசன் பூஜைகள் செய்தனர். விழா கமிட்டியினர் பொன் கார்த்திக், சண்முகவள்ளி, மாதேஷ், கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.
தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புறப்பாடு நடந்தது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அசுரர்கள் ஒவ்வொருவரையும் முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. பின் சுவாமிக்கு பலவகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கந்தசஷ்டி விழா கமிட்டியினர். கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். கண்ணன் பட்டர், அர்ச்சகர் செந்தில் பூஜைகள் செய்தனர்.
எழுமலை
எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் கோயில் சூரசம்கார வழிபாடு நடந்தது. சுப்பிரமணியர் மயில்வாகனத்தில் ஊர்வலமாக ராஜகணபதி, முத்தாலம்மன் கோயில் முன்பாக எழுந்தருளினார். அங்கிருந்து பல்வேறு வேடம் எடுத்து வந்த சூரனுடன் போர் புரியும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து முருகனுடைய வேலுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தேனி வேதபுரி சித்பவானந்த ஆசிரம தலைவர் சமானந்தர், சிறுமலை சுவாமி தத்வானந்த ஆசிரம தலைவர் ஞானசிவானந்தர், எழுமலை சுவாமி சிவனேசன் பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். வழிபாடு முடிந்ததும் முருகனை மாதாந்திர சுப்பிரமணியர் கோயிலுக்கு கொண்டு சென்றனர். இன்று (நவ.16) காலை 9:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
மேலுார்
இங்குள்ள சிவன் கோயிலில் கந்த சஷ்டி விரதம் துவங்கி ஆறாம் நாளான நேற்று விநாயகர், முருகன் மற்றும் சூரவர்மன் ஆகியோர் மயில், மூஞ்சூறு வாகனங்களில் ஊர்வலமாக கோயிலை சுற்றி வந்தனர். அங்கு தேவர் மற்றும் முனிவர்களை துன்புறுத்திய சூரபத்மனின் தலையை முருகன் வதம் செய்தார். இதற்காக முருகனிடம் வேலை பெற்ற சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி சூரனை வதம் செய்தார். இன்று (நவ.16) முருகன் – வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாட்டை நிர்வாக அதிகாரி யோகவதி செய்திருந்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு வட்டாரத்தில் சூரசம்ஹாரத்திருவிழா நடந்தது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழா கடந்த, 9ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. கடந்த, 10ம் தேதி கந்தசஷ்டி உற்வசம் காப்பு கட்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி தொடர்ந்து நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாலை வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. சுப்ரமணியர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு, எஸ்.எஸ்., கோவில் வீதி கிழக்கு வழியாக சென்று, சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பில், கஜமுகாசூரன் வதையும், தெப்பக்குளம் வீதி, வெங்கட்ரமணய்யர் சந்திப்பில், சிங்கமுகாசூரன் வதையும்; வெங்கட்ரமணய்யர் வீதி, ராஜாமில் ரோடு சந்திப்பில், பானுகோபன் வதையும், உடுமலை ரோடு தேர்நிலைப் பகுதியில், சூரபத்மன் வதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்ப, முருகப்பெருமான், சூரனை வதம் செய்த காட்சி, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. சூரம்ஹாரம் முடிந்ததும், வாழைத்தண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, கொய்யா, வெள்ளரிக்காய் போன்ற பழங்கள்; தயிர், கருவேப்பிலை,கொத்தமல்லி முதலியவை கொண்டு பிரசாதம் தயாரித்து, சுப்பிரமணியசுவாமிக்கு படைத்து விரதம் முடித்தனர். தண்டுவிரதம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், பொள்ளாச்சி எம்.எல்.ஏ., நித்தியானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று, 16ம் தேதி, மஹா அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
* குரும்பம்பாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், ஐந்தாம் ஆண்டு கந்தசஷ்டி விழாவில், நேற்று முன்தினம் மாரியம்மனிடம் முருகப்பெருமான், சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, சூரசம்ஹாரம் நடந்தது.
* சூளேஸ்வரன்பட்டி, கோகுலம் கார்டன் செந்துார் அழகன் கோவிலில், 7ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவில், நேற்று முன்தினம், வேல்வாங்கும் உற்சவமும், 15ம் தேதி, சூரசம்ஹார விழாவும் நடந்தது.
* ஜமீன் ஊத்துக்குளி வள்ளி தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு வேல்வாங்கும் உற்சவமும், நேற்று மாலை, 4:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது.
*கெட்டிமல்லன்புதுார் தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை,9:00 மணிக்கு திருக்கல்யாணம், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
*கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், நேற்று, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்கார தினமான நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வால்பாறை
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று முன் தினம் மாலை காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. விழாவில் நேற்று மதியம், 2:00 மணிக்கு கோவில்செயல்அலுவலர் ஹேமாசாலினி தலைமையில், எம்.ஜி.ஆர்.நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து வேல்வாங்கும் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு முக்கிய நிகழ்வாக சூரனை வதம் செய்யும் வகையில், புதிய பஸ் ஸ்டாண்டில் பக்தர்கள் கூட்டம் திரண்டனர். அதன் பின்னர் ஸ்டேன்மோர் சந்திப்பில் கஜமுகாசூரனை முருகன் வதம் செய்தார். அதனைதொடர்ந்து காந்திசிலை பஸ் ஸ்டாண்டு அருகில் சிங்கமுகா சூரனையும், பழைய பஸ் ஸ்டாண்டில் பானுகோபன் சூரனையும், சுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரில், சூரபத்மனையும், முருகன் அன்னையிடம் வாங்கிய வேலால், வதம் செய்த பின் கோவிலுக்குள் சென்றார். விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி
அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. இதையொட்டி தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபிேஷகம், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 36 முறை கந்த சஷ்டி கவசம், கூட்டு பிரார்த்தனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் 2:30 மணிக்கு நவ வீரர்கள் பூஜை, கந்தர் சஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சியில், முருகப்பெருமான் பத்மா சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. இதில் அய்யப்பன் எம்.எல்.ஏ., உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று காலை 10:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம், சுவாமி திருமணக் கோவிலத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக் குமார சுவாமிக்கு கந்தசஷ்டி பெருவிழா கடந்த 9ம் தேதி கணபதி பஜையுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வேல் வாங்குதல், இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நேற்று இரவு நடந்தது. அமைச்சர் ராஜவேலு உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 8:00 மணிக்கு தீபாராதனை, இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலா, நாளை மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு பூஜைகள், மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தன. தேனியில் பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமாள் கோயில் களில் கந்த சஷ்டி விழா விமர்சையாக நடந்து வருகிறது. நேற்று காலை வேல்முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் சூரர்களை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சூர சம்ஹாரத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கூடலுார்: கூடல் சுந்தரவேலர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். கோயிலில் சுந்தரவேலருக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். மாலையில் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து சூரசம்காரம் நிகழ்ச்சியும் அரோகரா கோஷத்துடன் நடந்தது. நிகழ்ச்சில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கம்பம்: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கம்பம் வேலப்பர் கோயில், கம்பராயப் பெருமாள் கோயில் சண்முகநாதருக்கும் பால் அபிஷேகம் நடந்தது. கம்பம் வேலப்பர் கோயிலில் நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலக்கு வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பாலபிஷேகம் நடந்தது.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. கோயிலில் இருந்து அரோகரா கோஷத்துடன் மயில்வாகனத்தில் வேலுடன் பாலசுப்பிரமணியர் புறப்பட்டார். திருவள்ளுவர் சிலை அருகே சூரபத்மனையும், பெருமாள் கோயில் அருகே தாரகாசூரன், தெற்கு அக்ரஹாரம் நுழைவிலில் பானுகோபன், தெற்கு ரதவீதியில் சிங்கமுகசூரன் என 4 இடங்களில் அசுரர்களை சம்ஹாரம் செயதார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம்: ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவசுப்பிரமணியர், சூரசம்ஹாரம் செய்தார். இதனை தொடர்ந்து வள்ளி தேவசேனோ சமேத சிவசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ராஜ அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். வடுகபட்டி வள்ளி தேவசேனா செந்தில் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடந்தது. முருகன் கோயில்களில் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று மாலை சூரசம்ஹார நிகழ்வு, வெகு விமரிசையாக நடந்தது. சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், இம்மாதம் 10ம் தேதி கொடி ஏற்றத்துடன் கந்த சஷ்டி உற்சவம் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில், யாகசாலை பூஜை மற்றும் சுவாமி உள்புறப்பாடு நிகழ்வுகள் நடந்தன. ஆறாம் நாளான நேற்று மாலை, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் நிகழ்வில் பங்கேற்று, ‘வெற்றிவேல், வீரவேல்’ என, பக்தி பரவசத்துடன் கோஷம் முழங்க, முருகனை வழிபட்டனர். கந்த சஷ்டி உத்சவத்தின் நிறைவு நிகழ்வாக, இன்று சிறப்பு அபிஷேகம், மாலையில் திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.
திருப்பூர்
திருப்பூர் பகுதி சிவன், முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெற்றது. இதில், சக்திவேல் பெற்றுச் சென்ற முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்து வெற்றி வேலாயுத சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூரில் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில், சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், கொங்கணகிரி ஸ்ரீகந்தப்பெருமாள் கோவில், வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்ரமணியர் உட்பட அனைத்து முருகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கடந்த 10ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது.
ஆறு நாட்களாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் இருந்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், அன்னை பார்வதியிடம் சக்திவேல் பெற்று, வீரபாகுவுடன் சென்று கஜமுகன், சிங்கமுகன், பானுகோபன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்தார். இதையடுத்து, பக்தர்கள் வெற்றி வேல், வீர வேல் என முழக்கமிட்டு வழிபட்டனர். சம்ஹாரம் முடிந்து கோவிலுக்குத் திரும்பிய முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. இன்று காலை சந்தனக்காப்பு களையப்பட்டு, வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்பிரமணியருக்கு மகா அபிஷேகமும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
வெற்றியின் மறுபெயர் வேலவன்
ஒருபுறம் பக்தர்களின் ஆரவாரம்... மறுபுறம் அசுரனின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி! வேல் பாய்ந்தது; சூரனின் தலை சரிந்தது. வெற்றித் திருமுகத்துடன் அருள்பாலித்தான் வேலவன். காலம் காலமாகக் கொண்டாடப்படும் கந்தனின் வீரத்தை, கண்முன்னே கண்ட பரவசத்தில் திளைத்தனர் பக்தர்கள். திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் நேற்று நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சி.
திண்டுக்கல்:
திண்டுக்கல் சுற்றுப்பகுதி முருகன் கோயில்களில் பக்தர்கள் படை சூழ, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நேற்று திரளான பக்தர்கள் அரோகரோ கோஷம் விண்ணதிர நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா கொடியேற்றம், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் நவ.,10ல் துவங்கியது. விழாவின் 6 நாட்களிலும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன. சஷ்டி விழாவின், சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாவட்டத்தில் அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று விமர்சையாக நடந்தது.
திண்டுக்கல்: அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, ஒய்.எம்.ஆர்., பட்டி சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி தண்டாயுதபாணி சுவாமி, மயில் முருகன் சுவாமி கோயில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. அதன்படி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி, தாராகாசூரன், அஜமுகி, சிங்காசூரன், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிப்பட்டனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இன்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் விழா நடந்தது. நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திருக்காட்சி அங்குள்ள கிரிவல பாதையில் நேற்று மாலை நடந்தது. இதில் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சிங்கமுகாசூரன், கஜமுகாசூரன், தாரகாசூரனை தனது வேலால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இறுதியில் வெற்றிவேலை கொண்டு மாமரமாக நின்ற சூரபத்மனை வேல் கொண்டு வதம் செய்து சூரசம்ஹாரத்தை நிகழ்த்தினார். பின்னர் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திண்டுக்கல், நத்தம், செந்துறை, வடமதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசரவணன், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கி, கலசாபிஷேகம், அன்னை காமாட்சியிடம் வேல் வாங்குதல் நடந்தது. பின்னர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வடமதுரை: மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், ரயில்வே ஸ்டேஷன் ரோடு பாலமுருகன், தென்னம்பட்டி சுப்பிரமணிய சுவாமி, நந்தீஸ்வரர் கோயில் வளாக பாலமுருகன், தீத்தாகிழவனுார் பேசும் பழனியாண்டவர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கடந்த நவ.,10ல் முதல் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். நாள்தோறும் சுவாமிக்கு திருமஞ்சனம், சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று சூர்சம்ஹாரத்தை முன்னிட்டு சில கோயில்களில் சூரர்களை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை
புறநகர் முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நேற்று, கோலாகலமாக நடந்தது. வேல் கொண்டு சூரனை முருகன் வதம் செய்தபோது, பக்தி பரவசத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்ப்பரித்தனர்.
பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் முதல் முறையாக நேற்று, சூரசம்ஹார விழா நடந்தது.
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று ஆறு அசுர பொம்மைகள் முழு உடல் தோற்றத்துடன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். திருப்போரூரில் மும்மூர்த்தி அம்சம் கொண்ட கந்தசுவாமி கோவில் உள்ளது. ஆறுபடை வீட்டிற்கு நிகரான இந்த கோவிலில் எந்திரமுருகன் வழிபாடும் நடைபெறுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி சூரசம்ஹார வைபவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு சஷ்டி விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆட்டுக்கிடா, புருஷாமிருகம், கிளி, பூதம், வெள்ளி அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் கந்தபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார வைபவம் நேற்று மாலை 6:00 மணிக்கு கோவிலின், கிழக்கு முகப்பில் விமரிசையாக நடந்தது. நேற்று, அதிகாலை 3:00 மணி முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவில் கொடிமரம் வட்ட மண்டபத்தை வலம் வந்து கந்தனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பகல் 11:00 மணியளவில், சரவண பொய்கையில் தீர்த்தவாரி நடந்தது. இதில், கந்தபெருமான் எழுந்தருளி குளத்தில் நீராடினார். அதைதொடர்ந்து படித்துறையில் காத்திருந்த பக்தர்களும் சரவணப்பொய்கையில் நீராடி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இதையடுத்து மாலை 6:00 மணிக்கு வெள்ளி குதிரை வாகனத்தில் தங்கவேல் கொண்டு போர்க்கோலத்தில் எழுந்தருளிய கந்தபெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கிழக்கு மாடவீதி தங்கபிள்ளையார் கோவில், வரை விரட்டி சென்று கெஜமுகன், பானுகோபன், அஜமுகி, தாருகன், சிங்கமுகன் ஆகியோரை வீரபாகு வேடமனிந்த குழுவினர், சிறுவர்கள் வதம் செய்தனர்.
அதனை தொடர்ந்து, கந்தபெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனை விரட்டி சென்று வதம் செய்தார். பின், தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமியை வழிபட்டனர். சூரசம்ஹாரம் விழாவையொட்டி ஒட்டி 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை 6:00 மணிக்கு கந்தபெருமான் திருக்கல்யாண உத்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் மாதவன், மேலாளர் வெற்றிவேல் மற்றும் உபயதாரர்கள் குழுவினர் செய்துள்ளனர்.
சிவகங்கை
கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களில் நடைபெற்றது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நவ., 10 அன்று காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை துவக்கினர். தினமும் முருகனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. பக்தர்கள் தினமும் மாலை கந்தனின் புகழை பாடி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவு நாளான நேற்று சூரனை வதம் செய்யும் கந்த சஷ்டி விழா நடந்தது. சிவகங்கை தேவஸ்தானம் காசி விஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு முருகன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நேற்று மாலை 6:15 மணிக்கு நடந்தது. முருகனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.
* குன்றக்குடி : சண்முகநாதப் பெருமான் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று மாலை 3:30 மணிக்கு ஆறுமுக செவ்வேள் அம்மையிடம் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. வெள்ளி ரதத்தில் சுவாமி எழுந்தருளினார். மாலை 6.30 மணிக்கு சூரனை முருகன் சம்ஹாரம் செய்தார். பொன்னம்பல அடிகள் தலைமை வகித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்செய்தனர்.
* மானாமதுரை: வழி விடு முருகன் கோயிலில் நவ., 10 ல் காப்பு கட்டி விரதம் துவக்கினர். தினமும் சுவாமிக்கு அபிஷேக,ஆராதனைகள் நடந்தது. நேற்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால் குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். ஆனந்தவல்லி, அங்காள பரமேஸ்வரி அம்மன், இடைக்காட்டூர், கால்பிரவு, வெள்ளிக்குறிச்சி,
கீழ கொம்புகாரனேந்தல்,வேம்பத்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வழிபாடு நடந்தது. * திருப்புத்துார்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சூரசம்ஹாரம் நடந்தது.
கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று காலை 11:00 மணி அளவில் முருகனுக்கு அபிேஷகம் நடந்தது. மூலவர் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். நேற்று மாலை 4:40 மணிக்கு சூரன் புறப்பாடாகி தேரோடும் வீதிகளில் வலம் வந்தார். சிவகாமி அம்மன் சன்னதியில் உற்ஸவ முருகன் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மாலை 5:07 மணிக்கு அம்மனிடம் வேல் வாங்கிய முருகன் கோயிலிருந்து அம்மன் கோபுர வாயிலிலிருந்து புறப்பாடாகி தேரடி தெருவில் எழுந்தருளி, சூரணை எதிர் கொண்டார். பின்னர் சூரனை வதம் செய்யும் சம்ஹாரம் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு சுப்பிரமணியர் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். காளியம்மன் கோயில் வளாக முருகன் சன்னதியிலும் சூரசம்ஹாரம் நடந்தது.
* தேவகோட்டை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பாலமுருகன் கோயிலில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மலைக்கோயிலில் தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜையும், தி.ராம.சாமி., கோயிலிலும், கல்யாணி சுப்பிரமணியன் கோயில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயிலில், நவ., 10ம் தேதி, காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. ஆறாம் நாளான நேற்று, காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாரியம்மன், விநாயகர், பாலமுருகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. மாலை, 6:10 மணிக்கு, மாரியம்மனிடம், பாலமுருகர் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொண்டாமுத்தூர் - மாதம்பட்டி ரோட்டில், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் பாலமுருகருக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. ஏராளாமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவை
சுக்கிரார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க விமரிசையாக நடந்தது. காலை 4 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகமும், 7 மணிக்கு மஹா தீபாராதனையும், பகல் 12 மணிக்கு கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்ரமணியசுவாமி கிடா வாகனத்தில் வேலாயுதம் ஏந்தி புறப்பட்டார். வழிநெடுக பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்கியது. வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. சுக்கிரார்பேட்டை, தெலுங்குபிராமின்வீதி, இடையர்வீதி சந்திப்பு, சலிவன்வீதி, காந்திபார்க் ரவுண்டான ஆகியபகுதிகளில் திருவீதி உலா வந்து சூரர்களை வதம் செய்தார் முருகப்பெருமான். தீபாராதனை, ராஜராஜேஸ்வரி கோயிலில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. கோயிலை அடைந்த சுப்ரமணிய சுவாமிக்கு பிராயசித்த அபிஷேகமும், தேவசேனா நிச்சயதாம்பூலமும் தீபாராதனையும் நடந்தன. இன்று மாலை 4:35 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
விருத்தாசலம்
விருத்தகிரிஸ்வரர் கோவிலில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிக்கு நேற்று காலை 10:00 மணியளவில் பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, மாலை 6:00 மணியளவில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உற்சவர் சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணியர் சுவாமி அருள்பாலித்து, விருத்தகிரிஸ்வரர் சுவாமியை வலம் வந்து, விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் சக்திவேலை வாங்கி, கோவில் முன் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் எழுந்தருளினார். அதன்பின், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடலுார்
சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த சூரசம்ஹார நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த 9ம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை அபிஷேகம், இரவு சுவாமி கோவில் உள் புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் முருகர், காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம், வேல் வாங்குதல் நிகழ்வு நடந்தது. நேற்று காலை மகா அபிஷேகம் நடந்தது. இரவு சூரசம்ஹாரம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (16ம் தேதி) காலை 9:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
பெண்ணாடம்
கந்த சஷ்டியையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில், சூரசம்ஹார விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4:00 மணிக்கு மூலவர் பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலி அம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள வள்ளி தெய்வானை சமேத முருகர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், காலை 6:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணியளவில் கோவிலின் முன் பக்தர்கள் முன்னிலையில், கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை, முருகன் சம்ஹாரம் செய்தார். இரவு 8:00 மணியளவில் சுவாமி வீதியுலா நடந்தது.
நடுவீரப்பட்டு
கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நடந்த சூரசம்ஹார திருவிழாவில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார திருவிழா நடந்தது. இந்த விழா கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பல்வேறு சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, நேற்று இரவு 7:00 மணிக்கு சூர சம்ஹார வழிபாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு சக்திவேலுக்கு மகா அபிேஷகம் நடந்தது. இன்று திருக்கல்யாண வழிபாடு நடக்கிறது.