உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை குறிஞ்சேரியில் வீரன் சிலை: ஆவணப்படுத்திய வரலாற்று ஆய்வு நடுவம்

உடுமலை குறிஞ்சேரியில் வீரன் சிலை: ஆவணப்படுத்திய வரலாற்று ஆய்வு நடுவம்

உடுமலை: உடுமலை அருகே, குறிஞ்சேரியில், நாயக்கர் கால வீரர் சிலையை, வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவணப்படுத்தியுள்ளனர்.

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், ஓய்வு பெற்ற மத்திய தொல்லியல் துறை ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி, வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த சிவக்குமார், அருட்செல்வன் ஆகியோர் ஆய்வு செய்து, ஆவணப்படுத்தியுள்ளனர். களப்பணியின் போது, தமிழாசிரியர் வீரய்யன், தேசிய நல்லாசிரியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறியதாவது:

குறிஞ்சேரி கிராமத்தில், மூன்று அடி உயரம், ஒரு அடி அகலத்தில் இருக்கும் இந்த ஆண் சிற்பம், பிற்கால நாயக்கர்கள் காலமாகவோ அல்லது பாளையக்காரர்கள் காலமாகவோ இருக்கலாம்.

தற்போது, மக்கள் வழிபாட்டில் உள்ள இந்த சிலையின், வலது கரத்தில் உயர்த்திய நிலையில் கொடுவாளும், இடது கரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் தண்டம் அல்லது கதை போன்ற ஆயுதத்தை ஊன்றிய நிலையில், சிலை காணப்படுகிறது.

கால்களில் வீரக்கழல்கள் போன்ற அணிகலன்களும், வலிமையான பாதக்குறடுகளும் அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகத்தில் முறுக்கு மீசையும் தோள்களின் பக்கவாட்டில் முழங்கால் வரை தொங்கும் மாலையும், காதுகளில் குண்டலமும், கைகளில் வளையமும், கங்கணமும் காணப்படுகின்றன.

உருட்டி விழிக்கும் கண்களும், உறுதியாக நிற்கும் தோற்றமும், தீயவரைப் பயமுறுத்துவதாகவும், மக்களுக்கு பாதுகாப்பும், நம்பிக்கையையும் அளிப்பதாக காணப்படுகிறது.

தமிழகத்தில், பரவலாக வணங்கப்படும் கருப்பண்ணசாமி, வேட்டைக்கார சாமி என, எல்லை தெய்வமாக அல்லது ஆளுமையான மக்கள் காவலராகவும், முன்னோர் வழிபாட்டின் குறியீடுகளாகவும் இருக்கலாம்.

இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !