உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்: ‘அரோகரா’ கோஷங்களுடன் பக்தர்கள் தரிசனம்

பழநி முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்: ‘அரோகரா’ கோஷங்களுடன் பக்தர்கள் தரிசனம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக இன்று வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. ‘அரோகரா’ கோஷங்களுடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


இக்கோயிலில் நவ.,10 ல் காப்புக் கட்டுதலுடன் இவ்விழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. காலை வெள்ளிச் சப்பரத்திலும், மாலை தங்கச் சப்பரத்திலும் சின்னக்குமார சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று அடிவாரம் கிரிவீதிகளில் நடந்த சூரசம்ஹாரத்தில் தாரகாசூரன், பானுகோபான், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகியோரை சின்னக்குமார சுவாமி வதம் செய்தார். ஆரியர் மண்டபத்தில் நடந்த வெற்றி விழாவில் சின்னக்குமார சுவாமி, முத்துக்குமார சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின் சுவாமி மலைக்கோயிலுக்கு சென்றார். இன்று காலை கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. இதையொட்டி 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமணியம் குருக்கள் தலைமையிலான குழுவினர் சிறப்பு யாக பூஜை நடத்தினர். பின் புனித கலசநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு காலை 10:15 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சண்முகர் வள்ளி, தெய்வானைக்கு தங்கத்தாலி அணிவிக்க திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மலர் மாலை மாற்றுதல், மணக்கோலத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு மஹா தீபாராதனை நடந்தது. சிறப்பு அன்னதானம் நடந்தது. பக்தர்கள் தங்கள் விரதத்தை பூர்த்தி செய்தனர். இன்று மாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தங்க குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன், அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !