உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் பழமையை பறைசாற்றும் 3000 வயதான ஸ்தல விருட்சம் இலந்தை மரம்

உத்தரகோசமங்கையில் பழமையை பறைசாற்றும் 3000 வயதான ஸ்தல விருட்சம் இலந்தை மரம்

உத்தரகோசமங்கை: ஆதி சிவன் கோயில் என அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலந்தை மரம் ஸ்தல விருட்சமாக உள்ளது.


ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ., துாரத்தில் உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. பழமையும் புரதான சிறப்பும் பெற்ற மங்களநாதர் சிவன் கோயிலில் ஏராளமான புராண இதிகாச தொடர்புடைய விஷயங்கள் நிறைந்துள்ளன. மரகத நடராஜர் சன்னதிக்கு செல்லும் வழியில் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அக்னி தீர்த்த தெப்பக்குளத்தின் எதிரே சகஸ்ர லிங்க சன்னதி அமைந்துள்ளது. இவற்றின் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலந்தை மரம் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இலந்தை மரத்தின் கீழ்பகுதியிலுள்ள பீடத்திற்கு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் செய்யப்பட்டு அவிக்காத பொருட்களான பானகம், பச்சை பயிறு, வெள்ளரிக்காய், மோர் உள்ளிட்டவைகள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.


குறிப்பாக இலந்தை பழம் சீசன் நேரங்களில் இனிப்புச் சுவை கொண்ட இலந்தை பழங்கள் காய்த்து குலுங்கும். அச்சமயத்தில் உதிர்ந்து விழும் பழங்களை ஆர்வமுடன் பக்தர்கள் சேகரித்து வைத்துக் கொள்கின்றனர். அவ்விதைகளை மாலையாக கட்டி பூஜை அறையிலும் வைத்துக் கொள்கின்றனர். இலந்தை மரத்தைச் சுற்றிலும் பாதுகாப்பாக மண்டபம் அமைக்கப்பட்டு அவற்றை உரிய முறையில் பராமரித்து வருகின்றனர். பல நுாற்றாண்டுகளைக் கடந்த இலந்தை மரத்தின் வேர் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் அவற்றின் பழமையை பறைசாற்றுகின்றன. கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் இதன் மகத்துவ மற்றும் சிறப்பை அறிந்து அவற்றின் அருகே அலைபேசியில் செல்பியும் எடுக்கின்றனர். உத்தரகோசமங்கையில் மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலவிருட்சம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற கோயிலின் மகத்துவம் பற்றிய அறிந்து கொள்கின்றனர். இதனருகே திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள தாவரவியல் பூங்காவில் கல்லாகிப்போன மரங்கள் குறித்த தகவல்கள் உள்ளன. அவற்றிலும் பழமையான மரங்களின் வரிசையில் உத்தரகோசமங்கை இலந்தை மரத்தின் சிறப்புகளும் குறிப்பிடப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !