பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா காப்புக் கட்டுதலுடன் துவங்கியது
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காப்புக் கட்டுதலுடன் துவங்கியது.
இக்கோயிலில் நேற்று துவங்கி நவ.,24 வரை கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின் விநாயகர், மூலவர், வள்ளி, தெய்வானை, சண்முகர், சின்னக்குமார சுவாமி, துவாரபாலகர், மயில், சன்னதி தெய்வங்களுக்கு காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது. அதன்பின் மாலை 6:00 மணிக்கு சண்முகர் அர்ச்சனை, மாலை 6:30 மணிக்கு தீபாராதனை, சின்னக்குமார சுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை தீபாராதனை, இரவு 7:30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் மாலை 6:15 மணிக்கு ‘முருகன் துணை நிற்பான்’ எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவும், இரவு 7:30 மணிக்கு கோயில் ஓதுவார்கள் திருப்புகழ் பாராயணமும் நடந்தது. நவ.,23 மாலை சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. நவ., 24ல் முருகன் கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில்களில் திருக்கார்த்திகை மகா தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடக்க உள்ளது. அன்று தங்க ரத புறப்பாடு நடக்காது.