திருத்தணி முருகன் மலை கோவிலில் பரணி தீபம் ஏற்றம் கோலாகலம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருத்தணி முருகன் மலைக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, முருகனை தரிசிப்பர். இன்று மாலை, பச்சரிசி மலையில் மகா தீபமும், முருகன் கோவில் தேர்வீதியில் சொக்கப்பனையில் நெய் தீபம் ஏற்றி வைக்கப்படும். இந்நிலையில், கார்த்திகை தீபத்தை ஒட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு, மூலவர் முருகப்பெருமான், உற்சவர்கள் ஆபத்சகாய விநாயகர், ஆறுமுகர், வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் மற்றும் கொடி மரம் ஆகிய சன்னிதிகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, திருத்தணி நகரில் உள்ள கோவில்கள், வீடுகள் மற்றும் அனைத்து வணிக வளாகங்களிலும், பரணி தீபம் ஏற்றி வழிபட்டனர். இன்று கார்த்திகை தீபம், கிருத்திகை மற்றும் பவுர்ணமியை ஒட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வருவர் என்பதால், மலைப்பாதையில் செல்ல அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. மேலும், பக்தர்கள் வசதிக்காக, மலைக்கோவிலுக்கு, 12 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, கோவில் இணை ஆணையர் நித்யா தெரிவித்தார்.