உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம்: இன்று மலை மேல் மகா தீபம்

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம்: இன்று மலை மேல் மகா தீபம்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் கோலாகலம்- கிரீடம் சூட்டப்பட்டு செங்கோல் ஏந்தி சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திருவாச்சி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் உச்சநிகழ்ச்சியான மலைமேல் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமி தெய்வானை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினர்.


தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக பூஜை செய்தனர். பின்னர் கோவில் ஸ்தானிகப்பட்டர் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை கையில் ஏந்தி புனித நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கிரீடம் சுப்பிரமணிய சுவாமிக்கு சூட்டப்பட்டு கையில் செங்கோல் ஏந்தி பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க மேள தாளங்கள் முழங்க பட்டாபிஷேக நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 


இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை திருநாளான இன்று காலை 8 மணிக்கு சிறிய வைரத்தேர் 16 கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து சன்னதியை அடையும். தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும்.  பெரிய கார்த்திகை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். மதியம் நடை சாத்தப்படாது. ஆண்டுக்கு 2 முறை 16 கால் மண்டபம் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள சிறிய வைரத் தேர் கார்த்திகை திருவிழாவில் ரத வீதிகளில் வலம் வரும். நாளை காலை தேரோட்டம் நடக்கிறது. அதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !