உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில்களில் வெகு விமரிசையாக நடைபெற்ற கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

சிவன் கோயில்களில் வெகு விமரிசையாக நடைபெற்ற கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

விருதுநகர்:

விருதுநகரில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக மூலவருக்கு 1008 சங்காபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவன் கோயில்களில் நடை பெறும் சங்காபிஷேகங்களில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தால், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், திருமணத்தடைகள் நீங்கி குழந்தை பேறும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி நேற்று விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேக பூஜைகள் நடந்தன. கோயில் வளாகத்தில் ஓம் என்ற வடிவத்தில் ருத்ராட்சம், சங்கு கொண்டு அலங்காரம் செய்திருந்தனர். 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, சிவாச்சாரியார்கள் அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதையடுத்து மூலவர் சொக்கநாதருக்கு புனித நீர் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது.

அருப்புக்கோட்டை


சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், அமுதலிங்கேஸ்வரர் கோயில்களில் ஆயிரத்து 8 சங்காபிஷேகம் நடந்தது. திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது முன்னதாக பூஜைகள் நடந்தது அம்மனுக்கு சங்குகளில் உள்ள புனித நீர் கொண்டு அபிஷேகம் நடந்தது. தீபராதனை காட்டப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாடானை

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. இது குறித்து சிவாச்சாரியார்கள் கூறியதாவது– கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் அன்று சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களாக கருதப்படுகின்றன. இந் நாட்களில் 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி யாகசாலை பூஜைகள் நடக்கிறது. இதன்படி மூலவருக்கு சங்காபிஷேகம் நடைபெறும். சங்காபிஷேகத்தை தரிசித்தால் குடும்பத்தில் அமைதி நிலவும், சகல ஐஸ்வர்யங்களும் பெருகும், நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம் என்றனர். நேற்று மாலை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நடந்த 108 சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரை வில்லாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.

தும்பைப் பட்டி சங்கரலிங்கம், கோமதி அம்பிகை கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை, 7:15 மணிக்கு பூஜை ஹோமங்கள், காலை, 9:30 மணிக்கு பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தெடார்ந்து, அபிஷேகம் பூஜை, சங்காபிஷேகம் நடைபெற்றன. தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வரும், 30ம் தேதி, டிச., 7 மற்றும், 14ம் தேதிகளில் கார்த்திகை மாத சோமாவரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

* பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஜோதிலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கார்த்திகை சோமவார சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருப்பூர்


திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்து வழிபடுவது மரபு. அதன்படி, திருப்பூர் சுற்றுப்பகுதி சிவாலயங்களிலும் சங்கு பூஜை, சங்காபிஷேகம் நடைபெற்றது. விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் வலம்புரி சங்குகள் நெல்மணிகள் மீது சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு, புனித தீர்த்தம் நிரப்பப்பட்டது. தொடர்ந்து சிறப்பு யாக பூஜைகள், வேதபாராயணம், தேவாரம், திருவாசக பாராயணம் நடைபெற்றன. பின்னர் மூலவருக்கு சங்காபிஷேகம், கலச அபிஷேகம் செய்து அலங்கார பூஜைகள் நடந்தன.

மகிழ்ச்சி பெருகும்


சங்காபிஷேகம் என்பது இறைவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைப்பதன் அடையாளமாகக் கருதப்படுகிறது. சந்திர பகவான் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதால், கார்த்திகை திங்கட்கிழமைகளில் சங்கு பூஜை நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதால் மனக்கவலை நீங்கி அமைதி பிறக்கும்; குடும்ப ஒற்றுமையும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

அவிநாசி


அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோவிலில், திருக்கல்யாண மண்டபத்தில் 108 சங்குகள் வைத்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ருத்ர ஹோமம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மானாமதுரை

மானாமதுரை,இளையான்குடி பகுதி சிவன் கோயில்களில் கார்த்திகை முதலாவது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் கார்த்திகை மாதத்தின் முதலாவது சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. சோமநாதர் சுவாமி சன்னதி வளாகத்தில் 108 சங்கு வைத்து ஹோமம் வளர்க்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனை, பூஜை நடைபெற்றன.இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் கோயில், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களில் அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.விழாவில் இளையான்குடி, சாலைக்கிராமம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டை


கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் நேற்று மாலை கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் நடந்தது. வேதமந்திரங்களை பாராயணம் செய்து ஒவ்வொரு சங்கிலும் புனித தீர்த்தங்களை ஊற்றி மலர்களை சமர்ப்பித்து வழிபட்டனர். அதன்பின் ஒவ்வொரு சங்கிலுமுள்ள புனித தீர்த்தத்தை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். அபிஷேகத்துக்கு பின் சிவபெருமானுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளை நடத்தினர். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 30வது ஆண்டு கார்த்திகை சோமவார விழா நேற்று நடந்தது. இதில், கோவிலில் உள்ள அனைத்து விக்ரஹங்களுக்கும் பால், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. உற்சவரும், மூலவரும் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

* காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் நான்கு தெருவார் தோப்பு வில்வநாத ஈஸ்வரர் கோவிலில், நான்கு தெருவார் செங்குந்தர் சமுதாயம் மற்றும் நான்கு தெருவார்தோப்பு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், 21வது ஆண்டு கார்த்திகை சோமவார விழா நடந்தது. இதில், நேற்று மாலை 5:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து புதுவை சம்பந்தர் குருக்கள் திருமுறை இன்னிசை நிகழ்த்தினார்.

* காஞ்சிபுரத்தில் உள்ள நால்வர் நற்றமிழ் மன்றம் சார்பில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 49வது ஆண்டு கார்த்திகை மாத சோமவார திருமுறை இன்னிசை விழா பிரதோஷ மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், மாலை 5:00 மணிக்கு நால்வர் நற்றமிழ் மன்ற மகளிர் குழுவினர் மற்றும் திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார் திருமுறை இன்னிசை நிகழ்த்தினர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கோவிலில் நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, தொடர்ந்து, நடராஜர் மண்டபத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து, கலச ஆவாஹணம் செய்தனர். பின், சிதம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. உலக நலன் வேண்டி மகாசங்கல்பம், ஜபம், வேதபாராயணம் நடந்தது. மந்திரங்கள் வாசித்து 108 மூலிகை பொருட்களால் யாகம் வளர்க்கப்பட்டது. மகாபூர்ணாகுதிக்கு பின் சிறப்பு அலங்காரம் செய்து சோடசோபசாரம், மகா தீபாராதனையும், 108 சங்காபிஷேகமும் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சுவாமி சன்னதியில் புனிதநீர் கலசங்கள், 108 சங்குகள் வைத்து, உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை நடந்தது. பின்னர், சுவாமிக்கு அபிஷேக ஆராதனையுடன், சன்னதி முழுவதும் விளக்கேற்றப்பட்டது. இதேபோல், விருத்தாசலம் ஏகநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர், மங்கலம்பேட்டை ஸ்ரீபால தண்டாயுதபாணி கோவில்களில் சோமவார பூஜை நடந்தது.

குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி ஆத்மநாதர் ஆலயத்தில் சோமவார பூஜை நடந்தது. குறிஞ்சிப்பாடி, ஸ்ரீ ஆத்மநாதர் ஆலயத்தில் சோமவார பூஜைகள் நேற்று நடந்தன. கார்த்திகை மாதம் முதல் சோமவார நிகழ்வையொட்டி ஆத்மநாதருக்கு நேற்று நடந்த சங்கு அபிஷேகம், ஆராதனை நிகழ்வில் குறிஞ்சிப்பாடி நகர வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !