மண் மலையான கார்த்திகை திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
மேலூர்: நரசிங்கம்பட்டியில் கார்த்திகையை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் வேண்டி ஏற்கனவே செலுத்திய மண் மலைபோல் குவிந்த இடத்தில் பக்தர்கள் எல்லா வளமும் கிடைக்க வேண்டி சுவாமி கும்பிட்டனர். நரசிங்கம்பட்டி பெருமாள் மலை அடிவாரக் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண் பிடி திருவிழா நடந்தது. திருவிழாவில் நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி, தெற்கு தெரு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் முன்பு உள்ள ஓடையில் புனித நீராடினர். பிறகு அங்கிருந்து ஒரு பிடி மணலை எடுத்து வந்து கோயில் முன் போட்டு வழிபாடு செய்தனர். இவ்வாறு ஆண்டுதோறும் பக்தர்கள் போட்ட மணல் மலையாக மாறிவிட்டது. இன்று மண் மலையை மூன்று முறை சுற்றி வந்த பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை நேர்த்தி கடனாக செலுத்தி வழிபட்டனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி வந்து முடிவு காணிக்கை கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் மேலவளவு கருப்பு கோயிலுக்கு வந்த பக்தர்கள் மலை மீது ஏறி கற்களை வீசியும், விளக்கு ஏற்றி வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அருவாளை காணிக்கையாக செலுத்தினர். புலிமலைபட்டி முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.