உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்மலையில் 350 கிலோ நெய்யில் மகா தீபம்! கள்ளழகருக்கு சிறப்பு திருமஞ்சனம்

அழகர்மலையில் 350 கிலோ நெய்யில் மகா தீபம்! கள்ளழகருக்கு சிறப்பு திருமஞ்சனம்

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் திருக்கார்த்திகை தீப உற்சவம் நிறை பௌர்ணமி நாளில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அழகர்மலை உச்சியில் சுமார் 350 கிலோ நெய், 100 கிலோ திரி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை மலை அடிவாரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


திருக்கார்த்திகையை முன்னிட்டு காலையில் சுந்தரராஜப் பெருமாள் எனப்படும் கள்ளழகருக்கு ஏகாந்தமாக திருமஞ்சனம் நடைபெற்றது. கோயில் திருமடப்பள்ளியில் உள்ள நாச்சியாருக்கும் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு திருமஞ்சனம் நடத்தினர். கோயில் வளாகம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாகக் காட்சியளித்தது. மகா தீபம் ஏற்றுவதற்கான நெய் மற்றும் பூஜைப் பொருட்களை, கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் காலையிலேயே தலைச்சுமையாக எடுத்துச் சென்றனர். அழகர்மலை உச்சியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோம்பை தளத்துக்கு கரடுமுரடான மலைப்பாதை வழியாக அவற்றைக் கொண்டு சேர்த்தனர். அங்கு பிரம்மாண்டமான அண்டாவில் சுமார் 350 கிலோ நெய் நிரப்பப்பட்டது. மேலும், 100 கிலோ எடையுள்ள திரி, 3 கிலோ கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் ஆகம விதிமுறைப்படி தயார் செய்யப்பட்டன. மாலை 6.45 மணிக்கு கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி முழக்கத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் பிரகாசமாக ஒளிர்ந்த மகா தீபத்தைப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


சோலைமலை முருகன், ராக்காயி அம்மன் கோயில்களிலும் தீபம்


அழகர்கோயிலின் உபகோயிலான அழகர்மலையில் உள்ள ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோயிலிலும் மாலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோயில் ராஜகோபுரம் முன்பாக பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அப்போது வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. ராக்காயி அம்மன் கோயிலிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். சுவாமிநாதன் தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !