கார்த்திகை தீபத்திருவிழா மலை உச்சியில் தீபம் ஏற்றம்: பக்தர்கள் பரவசம்
திண்டிவனம்
மரக்கணம்: திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றினர். திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் மலை உச்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முக்தியாஜல ஈஸ்வரன் கோவில் உள்ளது. நேற்று கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் மாலை மலை மீது வைக்கப்பட்டு இருந்த கொப்பரையில் மகா தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி, கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு மூலவர் பசுபதீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதையடுத்து, காலை 10:00 மணிக்கு கொப்பரை வீதியுலா நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு பசுபதீஸ்வரருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஏற்றப்படுவது போல, கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. உற்சவர் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் அருகே திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோவில், கோலியனுார் வாலீஸ்வரன் கோவில், கண்டமானடி சுந்தரேஸ்வரர் கோவில், ரங்கநாதர் கோவில், சித்தி விநாயகர் கோவில், பூந்தோட்டம் முத்துமாரியம்மன் கோவில், கே.கே.ரோடு முருகன் கோவில், முத்தாம்பாளையம் முருகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும், விளக்கேற்றியும், மகா தீபம் ஏற்றியும் வழிபாடுகள் நடந்தன.
தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடந்தன. இதேபோல், விழுப்புரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வீடுகளில் விளக்கேற்றியும், வீதிகளில் சிறார்கள் மாவளி சுற்றியும் கார்த்திகை தீபத்திருநாளை கொண்டாடினர்.
விக்கிரவாண்டி
புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப கிருத்திகை சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசாமி, புவனேஸ்வரர் , புவனேஸ்வரி, உற்சவர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசாமி சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலம்
மயிலம் முருகன் கோவிலில் நடந்த கார்த்திகை தீப திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. காலை, 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகமும், மதியம், 12:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் பக்தர்கள்
அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு குத்திக்கொண்டும் நேர்த்தி கடனை செலுத்தினர். மாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து, சங்கு கண்ணர் மண்டபத்தின் மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோவில் வளாகத்தில் 7:00 மணிக்கு சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே குட்டையூரில் மாதேஸ்வரன் மலை உள்ளது. இந்த மலை மீது மிகவும் பழமை வாய்ந்த மாதேஸ்வரன் கோயில் உள்ளது. நேற்று கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து கோயில் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மாதேஸ்வரன் சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சுப்பையன், திருப்பணி குழு தலைவர் டி.கே.வி. பழனிசாமி, நிர்வாக குழுத்தலைவர் முரளிபாபு மற்றும் அறங்காவலர்கள், ஓம் நமச்சிவாயா அறக்கட்டளை நிர்வாகிகள், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி– திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கார்த்திகை மாத பவுர்ணமி தீப பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, மாலை 6:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாள், ராஜமாதங்கி, வாராகி, பைரவர் புறப்பாடு, மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பவுர்ணமி பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்திருந்தது.
வில்லியனுார்
வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா நேற்று நடந்தது. வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12:00 மணியளவில் தீபாராதனையும், மாலை 5:30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 6:00 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் மாட வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் தலைமையில் உபயதாரர்கள், சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி குண்டான்குழி மகாதேவர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது. கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி உடனுறை குண்டான்குழி மகாதேவர் கோவிலில், நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், தீப ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேனி
தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், வேல்முருகன் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமாள் கோயில், முத்துமாரியம்மன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. சிவன், முருகன் சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பத்ரகாளியம்மன் கோயிலில் நடந்த விளக்கு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். மாலையில் வீடுகளுக்கு முன் கோலமிட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயிலில் வேலப்பர் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது.ஆராதனைகள் செய்து வழிபட்டனர். ஆண்டிபட்டி மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுனையில் நீராடி வேலைப்பரை வழிபட்டனர். ஜம்புலிப்புத்தூர் கதலிநரசிங்கப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி பூதேவியுடன் சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஆண்டிபட்டி பாலவிநாயகர், பாலமுருகன் கோயிலில் சுவாமி மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயில்,சக்கம்பட்டி கல்கோயில், ராஜவிநாயகர் கோயில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலத்தெரு சீலைக்காரி அம்மன், அய்யனார் சுவாமி கோயிலில் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடினார்.
மூணாறு: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா சிறப்பாக நடந்தது. பழைய மூணாறு பார்வதியம்மன் கோயிலில் இருந்து காவடி, பால் குடம் எடுத்து வந்து, முருகனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். மாலையில் கோயில் அருகே உள்ள மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இரவு சுவாமி வள்ளி, தெய்வானையும் சப்பரத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர்
கார்த்திகை தீபத்திருவிழாவான நேற்று, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷத்துடன், கோவில்களில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. வீடுகள், தொழிற்சாலைகள், கடைகளில், அகல்விளக்கு ஏற்றி வைத்ததால், திருப்பூர் நகரப்பகுதி தீப ஒளியில் ஜொலித்தது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து கோவில்களிலும், மாலை, 5:00 மணிக்கு, சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தீப ஸ்தம்பம், வாழைக்கன்றுகள், மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டது. திருக்கார்த்திகை தீபம் மற்றும் பரணி தீபம் ஏற்றி வைத்து, அண்ணாமலையார் பாடல்கள் பாராயணம் செய்து பக்தர்கள் வழிபட்டடனர்.
அதனைதொடர்ந்து, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா... அரோகரா...’ என்ற கோஷத்துடன், திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. கோவிலை சுற்றி எடுத்துவந்து, கோவில் முன்பாக உள்ள தீப ஸ்தம்பத்தின் உச்சியில் தீபம் வைக்கப்பட்டது. கோவிலின், நான்கு திசைகளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது; அதனை தொடர்ந்து, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், வீரராகவப்பெருமாள் கோவில், பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் என, அனைத்து கோவில்களிலும், கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடந்தது.
வீடுகளில்...
கோவில்கள் மற்றும் வீடுகளில், முன்னோர்கள் வழிபட்டு வந்த, திருவண்ணாமலை அண்ணாமலையார் சுவாமிகளுக்கு படையலிட்டு, மாவிளக்கு ஏற்றி வைத்து, தேவாரம் மற்றும் சிவபுராணம், திருத்தொண்டத்தொகை பாடல்களை பாடி வழிபாடு நடந்தது.
திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள பனியன் தொழிற்சாலைகள், வீடுகள், கடைகள், நிறுவனங்களில், மாலையில் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டது. வீட்டு வாசலில், குத்துவிளக்கு ஏற்றி வைத்தும் அதனை சுற்றி அகல் விளக்குகள் ஏற்றி வைத்தும், நிலவு, வாசப்படிகள், சுற்றுச்சுவர், வீட்டின் மாடியில் உள்ள கைப்பிடி சுவர் மீது, விளக்குகளை ஏற்றி வைத்தனர்.
ஒரே நேரத்தில், அகல் விளக்குகளை ஏற்றி வைத்ததால், நகரப்பகுதியின் பெரும்பாலான இடங்கள், இருள்நீங்கி, தீப ஒளியில் ஜொலித்தன. சாம்பிராணி, தசாங்க புகையால், வீடுகள் தோறும் நறுமணம் பரவியிருந்தது.
கிருத்திகை வழிபாடு
கார்த்திகை மாத பவுர்ணமி, கிருத்திகை நட்சத்திரம், திருக்கார்த்திகை தீபம் என, மூன்று முக்கிய வழிபாடு நேற்று நடந்தது. அம்மனுக்கு பவுர்ணமி பூஜை, முருகப்பெருமானுக்கான கிருத்திகை பூஜைகள் நேற்று மதியமே நடத்தப்பட்டன. மகா அபிஷே கம் மற்றும் அலங்கார பூஜைகள் மதியம் நடந்தன. விஸ்வேஸ்வரர் கோவிலில், கனம்புல்ல நாயனார் குருபூஜையும் நடந்தது. மாலை 4:00 மணி முதல், திருக்கார்த்திகை தீப விழா நடைபெற்றது.
திருச்சி
திருச்சி, மலைக்கோட்டையில், உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கோபுரத்தில், நேற்று மாலை, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலைக்கோட்டையில், 273 அடி உயரத்தில், உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே, 40 உயரமுள்ள கோபுரத்தில் வைக்கப்பட்ட கொப்பரையில், தீபம் ஏற்றுவதற்காக, 700 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெயில் 300 மீட்டர் திரியை ஊற வைத்திருந்தனர். திருச்சி, மலைக்கோட்டையில் தாயுமானவர் சன்னதியில், திருக்கார்த்திகை தினமான நேற்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 5:00 மணிக்கு, தாயுமானவர், மட்டுவார் குழலம்மை, பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகினர். தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மூன்று நாட்கள் எரியும் மகாதீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில மறைமலை நகர், அச்சிறுபாக்கம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் மலையடிவாரத்தில் பழமையான மருந்தீஸ்வரர் சமேத இருள் நீங்கி தாயார் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, மலை மீது, 111 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் தீபம் ஏற்றும் பணி நடந்தது. சிவனடியார்கள் மற்றும் கிராம மக்கள் பிரம்மாண்ட திரி தயாரித்தனர். நேற்று காலை 8:00 மணிக்கு கொப்பரை மற்றும் நெய், எண்ணெய் உள்ளிட்டவை மலை மீது பக்தர்களால் கொண்டு செல்லப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 6:05 க்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கல இசையுடன் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திருக்கச்சூர், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமியை தரிசித்தனர். கார்த்திகை தீபத்தை முன்னிட்டு செங்கல்பட்டு புறநகர் பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் மாவளி சுற்றி கொண்டாடினர்.
திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் வேதமலைக்குன்றில், நேற்று மாலை 6:00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றி பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.
சிவகங்கை
திருக்கார்த்திகையை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. குன்றக்குடி சண்முக நாத பெருமான் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு வள்ளி தெய்வானையுடன் சண்முகநாத பெருமான் எழுந்தருளினார். பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு முருகனை வழிபட்டனர். குன்றக்குடி மடம் முன் பொன்னம்பல அடிகள் சொக்கப்பனை ஏற்றி வைத்தார். மலைமீதுள்ள கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர். பக்தர்கள் முருகனை தரிசித்தனர்.
*திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மலைமீது அமைக்கப்பட்ட கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர்.
பிரான்மலை அடிவாரத்தில் மூன்று நிலைகளில் சிவனும் பார்வதியும் கோயில் கொண்டுள்ளனர். ஆகாயத்தளத்தில் மங்கைபாகர் தேனம்மை, பூமி தளத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி, பாதாளத்தில் திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுதாம்பிகை ஆக அருளாட்சி புரிகின்றனர். இம்மலை உச்சியில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தொட்டிக்கு வழிபாடு நடத்தப்பட்டு மாலை 5:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அருகே உள்ள முருகன் குன்றிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை
மதுக்கரை மரப்பாலம் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
தியாகதுருகம்: தியாகதுருகம் மலை மீது தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். தியாகதுருகம் நகரின் மையப் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க மலை உள்ளது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இம்மலை மீது பகவதி மலையம்மன் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி 3வது சனிக்கிழமை தோறும் மலை உச்சியில் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் திருத்தளிகை வழிபாடு நடத்தப்படுகிறது. அதேபோல் கார்த்திகை தீப திருவிழா அன்று மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. நேற்று பக்தர்கள் மாலை 6:00 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பவுர்ணமியையொட்டி, கிரிவலம் வந்து மலையம்மனை வழிபட்டனர்.
பெண்ணாடம்
கார்த்திகை தீபத்தையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் மலைக்கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை மூலவர் பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வினை தீர்த்த விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் மலைக்கோவிலில் உள்ள சவுந்தரேஸ்வரர் சன்னதியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு கோவிலின் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் ஏராளமானோர் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.
இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திருவட்டத்துறை திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி ஆகிய கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
கூடலுார்
நம்பாலக்கோட்டை சிவன்மலை சிவன் கோவிலில் மகா கார்த்திகை தீபம் திருவிழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு துவங்கிய கிரிவலம் ஊர்வலத்தில் பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்று கோஷம் எழுப்பி மலையை சுற்றி வந்தனர். ஊர்வலம் கோவிலில் நிறைவடைந்தது. மாலை, 6:00 மணிக்கு சிவன்மலை வளர்ச்சி சமூக நல அறக்கட்டளை தலைவர் கேசவன் முன்னிலையில், நடராஜ் மாஸ்டர் மகா தீபத்தை ஏற்றினர். பக்தர்கள் தீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி குழு, சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.