மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் சாற்றுமறை உத்சவம்
ADDED :17 minutes ago
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று திருமங்கையாழ்வார் சாற்றுமறை உத்சவம் நடந்தது.
வைணவ சமய பன்னிரு ஆழ்வார்களில், திருமங்கையாழ்வார் முக்கியத்துவம் பெற்றவராக திகழ்கிறார். கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திர நாளில் அவதரித்த அவர், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளை 20 பாசுரங்களில் போற்றிப் பாடியுள்ளார். திருமங்கையாழ்வார் அவதார நாளான நேற்று, ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சாற்றுமறை உத்சவம் விமரிசையாக நடந்தது. இதையொட்டி, பெருமாள், நிலமங்கை தாயார், தேவியர் உள்ளிட்டோருடன், திருமஞ்சன வழிபாடு கண்டு, திருப்பாவை சேவை பெற்றார். மாலை ஸ்தலசயன பெருமாள் – தேவியர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து, திருமங்கையாழ்வார் வீதியுலா சென்று, திருவாய்மொழி சாற்றுமறை சேவை கண்டார்.