உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவிரி புண்ணியத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம்!

காவிரி புண்ணியத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம்!

திருச்சி: சம்பா பயிரை காக்க திறந்துவிட்ட காவிரி தண்ணீர் மூலம், ஸ்ரீரங்கம் கோவில் மாசி மாத தெற்போற்சவம் நடக்கும் குளம் நிரம்பியது. மாசி தெப்ப திருவிழா நேற்று உற்சாகமாக துவங்கியது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாதம், ஒன்பது நாட்கள் நடக்கும் தெப்போற்சவ விழா வெகு சிறப்பானது. பாண்டியர் காலத்தில், சித்திரை திருநாளில், காவிரி நீர் பாய்ச்சி, முத்தும், பவளமும் கட்டின திருக்காவணமும் கட்டுவித்து, ஊருணியில் திருப்பள்ளி ஓடம் பொன்னால் செய்து நிறுத்தி, நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளச் செய்து, தெப்போற்சவம் நடந்தது. அதன்பின், ஆடி, 18ம் நாள், ஆடிப்பெருக்கின்போது, காவிரி ஆற்றில் திருப்பள்ளியோட (தெப்பம்) உற்சவமாக நடந்தது. ஒருமுறை, மந்திரவாதிகள் சிலரின் செயலால், தெப்பம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அச்செய்தியை கேட்ட, கூரநாரயண ஜீயர், தம்முடைய வலதுக்கரத்தில் அணிந்திருந்த, பவித்திரத்தை வலமாக திருப்ப, தெப்பம் காவிரி வெள்ளத்தினை எதிர்த்து நிலை கொண்டது. நம்பெருமாளும், உபயநாச்சியார்களும் எவ்வித ஆபத்தின்றி, மூலஸ்தானம் சென்றடைந்தனர். மந்திரவாதிகளின் துர்செயலுக்கு இடம் கொடுக்காத வகையில், கூரநாராயண ஜீயர், கோவிலின் மேற்கே ஓர் குளத்தை வெட்டி, திருப்பள்ளியோட திருநாளை நடத்தினார். அவரை கவுவிக்கும் வகையில், அன்று பெருமாளுக்கு படைக்கும் பிரசாதம் முழுவதும், ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்துக்கு இன்றுவரை அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்பின் கந்தாடை ராமானுஜ முனி, கடந்த, 1,489ம் ஆண்டு, குளத்தை சீரமைத்து, குளத்தின் நடுவே மைய மண்டபமும் கட்டி வைத்தார். தற்போது நடக்கும் மாசித்தெப்பம், துளுவ வம்சத்தைச் சேர்ந்த, விஜயராஜ பேரரசர் கிருஷ்ணதேவராயர் பெயரில் ஏற்படுத்தப்பட்ட பிரம்மோற்சவத்தின் திரிபாகும். மாசித்திங்கள் நடக்கும் திருநாளை, கிருஷ்ண மகாராயர் திருநாள் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போதைய மாசித்திங்கள் நடக்கும் விழா, அவரது பெயரால் குறிக்கப்படுவதில்லை. ஒன்பது நாள் மட்டுமே கொண்டாடப்படுவதால், கொடியேற்றத்துடன் துவங்குவதில்லை. திதி அடிப்படையில் கொண்டாடப்படும், மாசி தெப்ப உற்சவம், நேற்று வெகு சிறப்பாக துவங்கியது. காலை, 7 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியானில் புறப்பட்டார். ரெங்க விலாச மண்டபம் வந்த நம்பெருமாள், மாலை வரை அங்கேயே பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். மாலை, வாகன மண்டபம் சேர்ந்த நம்பெருமாள், ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி, உள்திருவீதியில் வலம் வந்தார். இரவு, 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். தொடர்ந்து, நம்பெருமாள், காலை, மாலை இருவேளையும் பல்வேறு வகையான வாகனங்களில் புறப்பட்டு, பல்வேறு இடங்களில் மண்டகப்படிகளை பெறுகிறார். காவிரி புண்ணியம்: உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம், வரும், 20ம் தேதி நடக்கிறது. முழுவதுமாக குளம் வற்றிப்போய், அப்பகுதி சிறுவர்களின் விளையாட்டு மைதானமாக மாறியிருந்தது. குளத்தில் நீர் நிரம்புவதுக்கான எவ்வித முன்னேற்பாடு பணிகளிலும் கோவில் நிர்வாகம் ஈடுபடவில்லை. இதனால் மாசித்தெப்பம் நடக்குமா? என்ற ஐயம் பக்தர்களுக்கிடையே ஏற்பட்டது. இந்நிலையில், சம்பா பயிர்களை காக்க, காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. காவிரியின் புண்ணியத்தால், ஸ்ரீரங்கம் வடக்குவாசல் தெப்பக்குளத்தெருவில், ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட தெப்பக்குளத்தில் நீர் நிரம்பியது. மைய மண்டபம் வர்ணம் பூசப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தெப்பம் தயார் செய்யும் பணியும் தீவிரமாக நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !