உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கரபாணி ஸ்வாமி கோவிலில் மாசிமக பெருவிழா பிப்., 17ல் துவக்கம்

சக்கரபாணி ஸ்வாமி கோவிலில் மாசிமக பெருவிழா பிப்., 17ல் துவக்கம்

கும்பகோணம்: சக்கரபாணி ஸ்வாமி கோவிலில் மாசிமகப்பெருவிழா வரும், 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கும்பகோணம் நகரில் உள்ள, ஐந்து முக்கிய வைணவத்திருத்தலங்களுள் ஒன்றாக, சிறப்புமிக்க வைணவ தலமாக சக்கரபாணி ஸ்வாமி கோவில் திகழ்கிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய, மூன்று மூர்த்திகளின் சொரூபமாகவும், சூரியபகவான் சரணாகதி அடைந்த தலம் என்பதால், இத்தலத்தை பாஸ்கரஷேத்திரம் என்றும், சூரிய பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு செய்யப்பட்ட தலமாகவும், சகல தோஷ நிவர்த்தி தலமாகவும், பரிகார, பிரார்த்தனை தலமாகவும் போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் வரும், 17ம் தேதி காலை, 11.00  மணிக்கு மேல், 11.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் மாசிமகப் பெருவிழா துவங்குகிறது. அன்று முதல் விழா நாட்களில், இந்திரவிமானம், சந்திரபிரபை, சேஷவாகனம், ஓலைச்சப்பரத்தில் கருடசேவை, அனுமந்தவாகனம், யானை வாகனம், சூர்ணாபிஷேகம் என, ஸ்வாமி வீதியுலா நடக்கிறது. வரும், 25ம் தேதி அதிகாலை மாசிமகத்தை முன்னிட்டு, விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சமேதரராக, சக்கரபாணிஸ்வாமி தேரில் எழுந்தருளுகிறார். அன்று காலை, 7 மணிக்கு மேல், 7.15 மணிக்குள், தேர் வடம்பிடிக்கப்பட்டு, மாசிமகத் தேரோட்டம் நடக்கிறது. வரும், 27ம் தேதி விடையாற்றி விழாவுடன் மாசிமகப் பெருவிழா நிறைவடைகிறது.  ஏற்பாடுகளை மயிலாடுதுறை மண்டல இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை கமிஷனர் சுவாமிநாதன், உதவி கமிஷனர்  மாரியப்பன், தக்கார் ஆசைத்தம்பி, கோவில் நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !