உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

விநாயகர் கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

நகரி: புதுப்பேட்டை, ஏகாம்பரகுப்பம் ஆகிய பகுதிகளில், திருப்பணிகள் முடிந்த, விநாயகர் கோவில்களுக்கு நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கியது. நகரி அடுத்த, புதுப்பேட்டை மெயின் ரோட்டில், அசுரவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக உட்சுற்றுப்புற மண்டபம் அமைக்கப்பட்டு, பரிவார தெய்வ சன்னிதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. புதிதாக, நந்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி கால பைரவர், மகா விஷ்ணு, பிரம்மதேவர், துர்க்கையம்மன், கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி ஆகிய விக்கிரகங்கள் ஏற்படுத்தப்பட்டு, தனி சன்னிதிகளும் அமைக்கப்பட்டது. இக்கோவிலின், திருப்பணிகள் முடிந்து நாளை, (15ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக, நேற்று கோவிலின் முன், யாகசாலைகள் அமைக்கப்பட்டு, கணபதி, நவக்கிரக ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தது. இன்று யாகசாலை ஹோமம், புதிய விக்கிரகங்களுக்கு அஷ்டா பூர்ணாஹூதி நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஏகாம்பரகுப்பம் அதேபோல், நகரி அடுத்த, ஏகாம்பரகுப்பம் பகுதியில் உள்ள, செல்வ விநாயகர் கோவிலிலும், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோவிலிலும், நேற்று யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நாளை காலை, 8:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, காலை, 8:30 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
பின்னர் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு விநாயகர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !