மாந்தோப்பில் இறந்த 56 குரங்குகள்: கோவில் கட்ட மக்கள் முடிவு!
வேலூர்: நாட்றம்பள்ளி மாந்தோப்பில், 56 குரங்குகள் மர்மமான முறையில் இறந்த இடத்தில், கோவில் கட்ட, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தில், தங்கராஜ் என்ற விவசாயிக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இங்கு, கடந்த, 11ம் தேதி, 11 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.இறந்த குரங்குகளின் உடலை, அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அடக்கம் செய்தனர். நேற்று முன்தினம், அதே இடத்தில், மேலும், பத்து குரங்குகள், நேற்று காலை, 10 மணிக்கு, ஆறு குரங்குகள் இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், தெய்வக் குற்றம் உள்ளதாகவும், இது வரை, இந்த இடத்தில், 56 குரங்குகள் இறந்துள்ள நிலையில், அங்கு கோவில் கட்டவும் முடிவு செய்தனர். அதன்படி, பத்து லட்சம் ரூபாய் மதிப்பில், அம்மன் கோவில் கட்ட, அக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.