காஞ்சி பிரம்மோற்சவ விழா: தங்க சிம்ம வாகனத்தில் அம்மன் பவனி!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன், நேற்று பிரதான வாகனமான, தங்க சிம்ம வாகனத்தில், வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற, காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு உற்சவம், கடந்த 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை, உற்சவ காமாட்சி வெவ்வேறு வாகனங்களில், வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம் திருவிழாவான நேற்று காலை, அம்மனின் பிரதான வாகனமான தங்க சிம்ம வாகனத்தில், உற்சவ காமாட்சி வீதியுலா நடந்தது. காலை 9:00 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். இரவு யானை வாகன உற்சவம் நடந்தது. இன்று காலை சூர்யபிரபை, இரவு ஹம்ஸ வாகனம் உற்சவம் நடைபெற உள்ளது.