உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலைபாயுதே! நம் மனம் அலைபாயுதே!

அலைபாயுதே! நம் மனம் அலைபாயுதே!

*மன ஒருமைப்பாடு தான் வெற்றியின் ரகசியம் என்ற உண்மையை அறிந்தவர்கள் புத்திசாலிகள்.
*தவம்செய்யும் யோகிகளுக்கு மட்டும் மனஒருமை தேவை என்று பலரும் நினைக்கிறார்கள். இது மிக தவறானது.
*செய்யும் தொழில் எதுவானாலும் அதில் சாதனை படைப்பதற்கு ஒருமுகத் தன்மை வேண்டும். இரும்பு அடிப்பவர், சுத்தியால் அடிக்கும் போது சிறிது குறி தவறினாலும் அவருடைய கை மேல் பட்டுவிடும். தச்சர் உளியைச் சரியாகப் பிடிக்காவிட்டால் கால் விரலை இழக்கும் அபாயம் ஏற்படும்.
*சொற்பொழிவுகளைக் கேட்டு, ஒருமுகத்தன்மையை யாரும் பெற முடியாது. தொடர் முயற்சியால் மட்டுமே மனஒருமையைப் பெறுவது சாத்தியம்.
*கிருஷ்ணா! என் மனம் அமைதியில்லாமல் அலைபாயும் குணம் கொண்டதாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவது காற்றைப் பிடிப்பது போல இருக்கிறது என்று அர்ஜூனன் மனதின் தன்மையைக் கிருஷ்ணரிடம் தெரிவிக்கிறான்.
*அர்ஜூனன் நேர்மையும், வீரமும் மிக்கவன். அவனே மனம் அலைபாய்கிறது என்று சொல்கிறான். இக்கால மனிதனோ, புலனின்பங்களைத் தேடி ஓடும் நிலையில் இருக்கிறான். இந்த நிலையை என்னவென்று சொல்வது?
*மனதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் முதலில் மனதின் இயல்பைப் புரிந்து கொள்வது அவசியம்.
*ஆயிரமாயிரம் எண்ணங்களை அசைபோடுவது, எல்லா இடங்களிலும் மூக்கை நுழைப்பது, அர்த்தமில்லாமல் ஆசைப்படுவது, கவலையில் ஆழ்வது, ஆகாயத்தில் கோட்டை கட்டுவது என்று மனதின் இயல்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
*இயல்பிலேயே அமைதியற்றுக் கிடக்கின்ற மனமானது, அதைத் தூண்டிவிடும் சூழ்நிலை அமையும் போது, அதற்கேற்ப ஆடத் தொடங்கி விடுகிறது.
*கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களே மனதின் வாகனங்கள். புலன்கள் மனதை இஷ்டம்போல இழுத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவை. புத்தியின் உதவியால் மட்டுமே மனதைக் கட்டுப்படுத்த முடியும்.
*பெரிய செயல்களைச் செய்த சாதனையாளர்கள், யாராக இருந்தாலும், அவர்கள் மனதைக் கட்டுப்படுத்தும் வித்தையை அறிந்தவர்களாக இருப்பார்கள்.
*மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் சாதாரண சிறிய விஷயங்களை நிறைவேற்றக் கூட போராட வேண்டி யிருக்கும்.
*ஒருமுகப்பட்ட மனம் தான் மனிதனுக்கு உண்மையான ஒளிவிளக்கு. விளக்கு இருளைப் போக்கி ஒளி தருவதுபோல, மனிதனின் அகஇருளை ஒருமுகப்பட்ட மனம் தருகிறது.
*பக்தியில் ஈடுபடுபவர்கள் தங்களின் மனதை கடவுள் மீது ஒருமுகப்படுத்த வேண்டும்.
*மனஒருமை பெற விரும்பினால் பொறுமை மிக தேவை. பொறுமை உள்ள மனிதனால் சாதிக்க முடியாதது இவ்வுலகில் எதுவுமேகிடையாது.
*குறிக்கோள் இல்லாமல் ஓடும் மனதை, ஒழுக்கம் என்னும் அணையால் தடுத்து நிறுத்துங்கள். நல்வாழ்க்கை என்னும் பாசனக்கால்வாய் வெட்டி அதில் அந்நீரைப் பாய்ச்சுங்கள். அப்போது மகிழ்ச்சி என்னும் நல்ல விளைச்சல் கிடைக்கப் பெறுவீர்கள்.
*மனஒருமைப்பாடு கைவரப்பெற்றால் வாழ்க்கை முழுவதும் இடைவிடாத மகிழ்ச்சியும், வெற்றியும் என்றென்றும் உங்களைப் பின்தொடர்ந்து வரும். வெற்றிமேல் வெற்றி வந்துசேரும். சாதனை பல படைக்கும் ஆற்றல்பெறும் மாமனிதராக திகழ்வீர்கள்.
புருஷாத்தமானந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !