தென்னேரியில் வரதராஜ பெருமாள் தொப்போற்சவலம்
காஞ்சிபுரம்: தென்னேரி தெப்போற்சவம், இன்று(20ம் தேதி) மாலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில், ஆண்டுதோறும் தெப்போற்சவம் நடைபெறும். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கிராமத்திற்கு வந்து, தெப்பத்தில் பவனி வருவார். இந்த ஆண்டு தெப்போற்சவம் இன்று நடைபெற உள்ளது.இந்த உற்சவத்திற்காக, வரதராஜப் பெருமாள் நேற்று இரவு 9:30 மணிக்கு, கோவிலிலிருந்து புறப்பட்டார். கன்னிகாபுரம், வாலாஜாபாத் வழியாக, இன்று அதிகாலை 4:30 மணிக்கு தென்னேரியை வந்து அடைவார். அங்கு வீதியுலா முடிந்த பிறகு, பெருமாள் ஐமிச்சேரி, நாவட்டான்குளம், திருவங்காரணை, குன்னவாக்கம், மலையடிவாரம், அகரம், ஆகிய கிராமங்களில் மண்டகப்படி கண்டருளி, மாலை 5:30 மணிக்கு, மீண்டும் தென்னேரியை வந்தடைவார். மாலை 6:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, தென்னேரி ஏரியை வலம் வருவார். பக்தர்கள் திரளாக கலந்து கொள்வர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக ஆணையர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.