நமசிவாய வாழ்க கோஷத்துடன் திருமுருகன்பூண்டி தேரோட்டம்
அவிநாசி: நமசிவாய வாழ்க சண்முகநாதருக்கு அரோகரா கோஷங்கள் முழங்க, திருமுருகன்பூண்டி தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.திருப்பூர் மாவட்டத்தில், தேவார பாடல் பெற்ற சிவாலயங்களுள் ஒன்றான திருமுருகநாத சுவாமி கோவில், தேர்த்திருவிழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு ஒவ்வொரு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடந்தது. கடந்த 23ம் தேதி பஞ்சமூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் காட்சி, வீதியுலா மற்றும் நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தேரோட்ட நாளான நேற்று அதிகாலை, மக நட்சத்திரத்தில் சோமாஸ்கந்தர், விநாயகர், சண்முகநாதர் உற்சவ மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் தேர்களுக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள், தேர்களில், சுவாமிகளை தரிசனம் செய்தனர். தேரோட்ட நிகழ்ச்சி, மாலை 4.00 மணிக்கு துவங்கியது. சிறப்பு பூஜைகளுக்குபின், தேரோட்டம் துவங்கியது. அவிநாசி வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்கள், "நவசிவாய வாழ்க "சண்முகநாதருக்கு அரோகரா என கோஷம் எழுப்பி, வடம் பிடித்து இழுத்தனர். திருமுருகநாத சுவாமி தேர் நிலை சேர்ந்ததும், ஸ்ரீசண்முகநாதர் தேரோட்டம் நடந்தது. இன்று மாலை 3.00 மணிக்கு தேரோட்டம் மீண்டும் நடக்கிறது.