உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் கோயிலில் இன்று மயானக்கொள்ளை உற்சவம்

மேல்மலையனூர் கோயிலில் இன்று மயானக்கொள்ளை உற்சவம்

செஞ்சி:மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் இன்று மயானக்கொள்ளை உற்சவம் நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசி திருத்தேர் விழா மகா சிவராத்திரியான நேற்று காலை கோபால விநாயகர் பூஜையுடன் துவங்கியது. இரவு 8 மணிக்கு கொடியேற்றினர். தொடர்ந்து சக்தி கரகம் எடுத்து வந்தனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மயான கொள்ளை நிகழ்ச்சி நடக்க உள்ளது. மேல்மலையனூர் கோயில் ஸ்தல புராணத்தின் படி சரஸ்வதியின் சாபத்தினால் சிவபெருமானின் கரத்தில் ஒட்டிக்கொள்ளும் பிரம்ம கபாலத்தை அங்காள பரமேஸ்வரி விஸ்வரூபம் எடுத்து ஆட்கொள்ளும் நிகழ்ச்சியை இங்கு ஆண்டு தோறும் மயானக்கொள்ளையாக நடத்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்தி கடனாக தானியங்கள், உணவு பொருட்களை மயான கொள்ளையின் போது சூறை விடுவது வழக்கம். மயானக்கொள்ளையைத் தொடர்ந்து 14ம் தேதி மாலை 4 மணிக்கு தீமிதி விழாவும், 16ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, அறங்காவலர் தலைவர் சின்னத்தம்பி, மேலாளர் முனியப்பன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சரவணன், வடிவேல், சேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !