மேல்மலையனூர் கோயிலில் கண்காணிப்பு டவர்கள் ஏற்பாடு
செஞ்சி:மேல்மலையனூரில் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முதன் முறையாக கண்காணிப்பு டவர்களை ஏற்பாடு செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடக்கும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம், திருத்தேர் உற்சவம், மயானக்கொள்ளை ஆகிய நிகழ்ச்சிகளின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். அப்போது ஏற்படும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் செயின் பறிப்பு, உடமைகளை திருடுவது என குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அத்துடன் முதியவர்கள், பெண்கள் மற்றும் அப்பாவிகளிடம் அடாவடி செய்பவர்களை கண்காணிக்கவும் எந்த ஏற்பாடும் இல்லாமல் இருந்தது. தற்போது நடந்து வரும் மாசி திருவிழாவில் திருடர்களைக் கண்காணிக்கவும், நெரிசல் ஏற்படும் இடத்திற்கு உடனடியாக போலீசார் செல்வதற்கும் வசதியாக 15 அடி உயரத்தில் கண்காணிப்பு டவர் அமைத்துள்ளனர். இதன் மீதிருந்து கண்காணிக்கும் போலீசார் கொடுக்கும் தகவலின்படி தேவையான இடத்திற்கு உடனே போலீசாரை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கண்காணிப்பு டவரை தேவையான இடத்திற்கு கொண்டு சென்று நிலைநிறுத்தும் வகையில் சக்கரங்களை அமைத்துள்ளனர். இதன் மூலம் ஜேப்படி ஆசாமிகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க போலீசார் புதிய முயற்சி எடுத்துள்ளனர்.