தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம்: கிராம கோயில் பணியாளர்கள் முடிவு
ADDED :4633 days ago
தமிழகத்தில் உள்ள, அனைத்து கிராம கோவில் பணியாளர்களையும், அரசு ஊழியராக்க கோரி, கிராம கோவில் பணியாளர்கள் இம்மாதம், தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செல்ல முடிவு செய்துள்ளனர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 38 ஆயிரம் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர், நிவேதனப் படையல்கள் தயாரிப்போர், பூசாரி, பகல் இரவு காவலர்கள், பணிப்பெண் உள்ளிட்ட பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கிராம கோவில் பணியாளர்கள் சங்கம், தமிழகம் முழுக்க, சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இம்மாதம், 13ம் தேதியிலிருந்து, 25ம் தேதி வரை, சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். கோவில் பணியாளர்கள் அனைவரையும், அரசின் அடிப்படை ஊழியராக்க வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மருத்துவ காப்பீடு வசதி செய்து தர வேண்டும். கோவிலில், ஆகமம் பயின்று, 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிடும் அர்ச்சகர்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் போன்ற, பல்வேறு அம்ச கோரிக்கைகளையும், சுற்றுப் பயணத்தில் வலியுறுத்த இருக்கின்றனர். இது குறித்து, கிராம கோவில் பணியாளர் சங்க செயலர், சுந்தரேசன் கூறியதாவது: கிராம கோவில் பணியாளர்களுக்கு, எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. பொதுமக்கள் விபூதி தட்டில் போடுகிற, ஒரு சில காணிக்கைகளை வைத்தே வாழ்கின்றனர். ஒட்டுமொத்த வாழ்வையும் ஆன்மிகத்திற்காக செலவிடும், கிராம கோவில் பணியாளர்களை, அடிப்படை ஊழியராக்க வேண்டும்; இல்லை எனில், கிராம கோவில் பணியாளர்களில் பெரும்பான்மையோர், வேறு வேலைக்கு செல்லும் அபாயம் உள்ளது. இதனால், ஆன்மிகப் பணிகள் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறையும்; அடுத்த தலைமுறைக்கும், ஆன்மிக செயல்பாடுகள் தெரியாமல் போய்விடும். இவ்வாறு அவர் கூறினார். நமது நிருபர்