கோயில் மரத்தில் விநாயகர் உருவம்: பரவசமடைந்து பூஜைசெய்த பக்தர்கள்
கூடலூர்:கூடலூர் எம்.ஜி.ஆர்., நகர் முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் சிற்றரசு மரத்தில் உருவாகியுள்ள விநாயகர் வடிவத்தை பக்தர்கள் ஆச்சரியத்துடன் கண்டு, தரிசித்து செல்ல துவங்கியுள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள முனீஸ்வரர் கோயில் திருவிழா வரும் 22ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக, நேற்று முன்தினம் பக்தர்கள் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் உள்ள சிற்றரசு மரத்தை (பால் மரம்) பக்தர்கள் சுத்தம் செய்தபோது மரத்தின் அடிபாகத்தில் இருந்து சுமார் 5 அடிக்கு மேல் விநாயகர் தோற்றத்தில் மரம் வளர்ந்திருப்பதை அறிந்து பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதனை தொடர்ந்து, மரத்தில் இருந்த விநாயகர் உருவத்துக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து பூஜை செய்து தரிசிக்க துவங்கினர்.இதனையடுத்து உள்ளூர் மக்கள் பெருமளவில் கோயிலுக்கு வந்து ஆச்சரியத்துடன் தரிசித்து செல்கின்றனர்.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், "இந்த மரத்தில் தோன்றியுள்ள விநாயகர் உருவம் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை அறிந்த உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கோயிலுக்கு வந்து தரிசித்து செல்கின்றனர் என்றனர்.