சாமவேதத்தில் சபரிமலை!
வேதத்தை நான்கு பகுதியாகப் பிரித்தவர் வியாசர். இதில் மூன்றாவது வேதமான சாமவேதத்தை, ஜைமினி முனிவருக்கு உபதேசித்தார். கீதையில் கிருஷ்ணர், வேதானாம் உபநிடதம் ஸாமவேதோ அஸ்மி என்று குறிப்பிட்டுள்ளார். வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன் என்பது இதன் பொருள். இதில் தான் தியானமுறைகள், வழிபாட்டு பாடல்கள், பக்தியின் மேன்மை பற்றி கூறப்பட்டுள்ளது. வாழ்வின் லட்சியமே கடவுளை அடைவது தான் என்பது சாமவேதம் உணர்த்தும் கருத்தாகும். பாடல் வடிவிலுள்ள சாம வேத மந்திரங்கள், நந்தவனத்தில் இருக்கும் புத்தம் புது மலர் போல் மணம் வீசுபவை. இம்மந்திர மலர்களைக் கொண்டு இறைவனை ஆராதனை செய்பவர்களின் நல்ல எண்ணங்கள் யாவும் நிறைவேறும் என்பது ஞானிகளின் கருத்து. புகழ்பெற்ற தத் த்வமஸி (அந்தக் கடவுளாகவே நீ இருக்கிறாய்) என்னும் வேத வாக்கியம் சாமவேதத்திலுள்ள சாந்தோக்யோ உபநிஷதத்தில் இடம் பெற்றதாகும். இந்த வார்த்தை தான் சபரிமலை ஐயப்பன் கோயில் நுழைவுவாயிலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.