மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அதனையொட்டி அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் நடந்தது. இரவு 11:00 மணிக்கு அன்னபூரணி அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அர்ச்சனையுடன் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டனர். இரவு 12:15 மணிக்கு மகா தீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, நடைமுறை அறங்காவர் பச்சையப்பன் பங்கேற்றனர். தீபாவளி விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தைவிட கூடுதலாக பக்தர்கள் குவிந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, கடலுார், வேலுார் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது..