ராமேஸ்வரத்தில் மெகா கலசங்களில் கங்கை தண்ணீருடன் ஊர்வலம்!
ADDED :4642 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில், மகாராஷ்டிர பக்தர்கள், கங்கை நீர் நிரம்பிய பெரிய கலசங்களை காவடியாக தூக்கி, ஊர்வலமாக வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல், விவசாயம் செழிக்க வேண்டி, மகாராஷ்டிரா பக்தர்கள் 2,000 பேர், கங்கை நீரை இரு பெரிய கலசங்களில் எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் வந்தனர். அதை காவடி கட்டி, ராமேஸ்வரம் நான்கு ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரை வழியாக கொண்டு சென்றனர். பின், ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். "அம்மாநில விவசாயிகள், சிவனுக்கு புனித கங்கை நீரில், அபிஷேகம் செய்தால், நாட்டில் பஞ்சம் நீங்கி, பொருளாதார வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில், கங்கை நீரை காவடி தூக்கி, நேர்த்திக்கடன் செலுத்தியதாக ராமேஸ்வரம் பா.ஜ., நிர்வாகி முரளீதரன் தெரிவித்தார்.