காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் இன்று திருக்கல்யாண வைபவம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், இன்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா நடைபெறும். இவ்வாண்டு விழா, கடந்த 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு, வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று காலை ஆள்மேல் பல்லக்கு உற்சவம், இரவு பிரபல உற்சவமான வெள்ளி மாவடி சேவை உற்சவம் நடைபெற்றது. இன்று, திருக்கல்யாணத்தையொட்டி, காலை சபாநாதர் தரிசனமும் அதையொட்டி மாலை ஒக்கப்பிறந்தான் குளத்தில் எழுந்தருளி மண்டகப்படி உற்சவமும் நடைபெறும். இரவு பிரபல உற்சவமான பங்குனி உத்திரத் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. நாளை புருஷாமிருக வாகனத்தில் உலாவும், இரவு பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற உள்ளன.