உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆசிரியர்களுக்கு ஒரு அட்வைஸ்!

ஆசிரியர்களுக்கு ஒரு அட்வைஸ்!

ஒரு 16 வயதுப் பையன். அவன் பாடப் புத்தகத்தில் சில தவறான படங்களை வைத்திருக்கிறான். அவற்றைப் பார்த்ததும் ஆசிரியருக்கு ஒரே கோபம். எவ்வளவு மோசமானவன்? நீ வகுப்பையே கெடுத்துவிட்டாய். பிரின்சிபாலிடம் கூறி உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கத்துகிறார் ஆசிரியர். மாணவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்துவிடப் போகிறது.  அவ்வளவுதான் எனது எதிர்காலம் இருண்டுவிட்டது என அவன் நினைத்து, வகுப்பை விட்டு வெளியே ஓடினான். ரயில்வே டிராக். இவன் குழப்பத்தில் ஓடவும் ரயில் ஒன்று வரவும் சரியாக இருக்க, அடிபட்டு இறந்துவிட்டான்.  அவனது பிரச்னையை ஆசிரியர் எப்படிக் கையாண்டிருக்கலாம்? அப்படங்களை அங்கேயே, அப்போதே கிழித்துப் போட்டுவிட்டு,  நீ என்னை என் அறையில் வந்து பார் என்று கூறி, அங்கே,  ரொம்பத் தவறு. இதனால் நீ சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக் கொள்வாய். நல்லவேளை படங்கள் என் கையில் கிடைத்தன. வேறு யாரிடமாவது கிடைத்திருந்தால் உன் வாழ்க்கை வீணாகப் போயிருக்கும் என்று கூறியிருக்கலாம். இவ்வாறு  உனது சிறந்த நண்பன் என்ற சிந்தனையை அந்த ஆசிரியர் அந்த மாணவனிடம் உருவாக்கியிருந்தால் அவன் திருந்த ஒரு வாய்ப்பு இருந்திருக்கும்.

திருட்டு மாணவனும் மற்ற மாணவர்களும்: ஒரு  மாஸ்டரிடம் பத்து மாணவர்கள் படிக்கிறார்கள். ஒருவன் எதையோ திருடி விட்டான். அவனை மாஸ்டரிடம் கொண்டு போய் நிறுத்தினார்கள்.  அவர்,  அந்தப் பொருள் வேண்டுமென்றால் என்னிடம் கேட்டிருந்தால் நான் தர மாட்டேனா? திருடுவது பிறருக்கு வருத்தத்தை உண்டுபண்ணும். உனக்குக் கெட்ட பெயரைத் தரும் என்று பாடம் எடுக்கிறார். அவனும் செய்தது தப்பு என உணர்வதாகக் கூறினான்.  மற்ற மாணவர்களிடம் மாஸ்டர்,  அவனை யாரும் இழிவாக நடத்தாதீர்கள். ஒற்றுமையாக இருங்கள் என்றார்.  ஆனால் அந்தப் பையன் மறுபடியும் திருடிவிட்டான். மற்ற ஒன்பது பேரும் அவனை,  பள்ளியை விட்டு வெளியேற்றுங்கள் என்று மாஸ்டரிடம் கொண்டு வந்து நிறுத்தினர். நான் அனுப்ப முடியாது. அவன் இருந்தால் கெட்டுவிடுவீர்கள் என்றால் நீங்கள் ஒன்பது பேரும் வெளியில் போகலாம். திருட்டு தவறு என்று உங்களுக்குத் தெரிகிறது. அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு இன்னும் பாடம் முடியவில்லை. மட்டுமல்ல, போன தடவை அவனுக்கு நான் ஒரு மணி நேரம் வகுப்பு எடுத்தேன். அதற்குப் பிறகும் அவன் திருடினான் என்றால் அவனுக்குப் புரியும்படியாக எனக்குச் சொல்லித் தரத் தெரியவில்லை என்று அர்த்தம். நானும் என் ஆசிரியர் தொழிலில் அன்று தோல்வி அடைந்ததால் அவன்  என்னிடம் தான் படிப்பான் என்று கூறினார். தமது தோல்வி என அவர் நினைப்பது ஆசிரியரின் சிறப்பின் உச்சக்கட்டம்.

நான் இருக்கிறேன்: ஒரு பையன் தனது ஆசிரியையின் 82-வது பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டு பரிசு பார்சல் அனுப்பினான். ஏன்? அவன் பள்ளியில் படித்தபோது எட்டாம் வகுப்பு வரை நல்ல மதிப்பெண்கள். ஒன்பதாம் வகுப்பில் சரியாகப் படிக்கவில்லை, மதிப்பெண் குறைவாகப் பெற்றான். அந்த ஆசிரியை அவனிடம்,  படித்த நீ இப்போது ஏன் இப்படித் தோல்வி அடைகிறாய்? என்னிடம் உண்மையைக் கூறு என்றார். நான் எட்டாம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதும்போது என் அம்மா இறந்துவிட்டார். என் அப்பா இன்னொரு திருமணம் செய்து கொண்டார். சித்தியை எனக்குப் பிடிக்கவில்லை. அப்பாவின் அன்பு எனக்கு இப்போது கிடைப்பதில்லை. என்னிடம் நிஜமான அன்பு காட்டுபவர் யாருமில்லை என்றான் பையன். உடனே ஆசிரியை,  இல்லை? நீ என்னையே உன் அம்மாவாக நினைத்துக்கொள். உனக்கு என்ன சிரமம் என்றாலும் என்னிடம் கூறலாம். உனக்கு அன்பு காட்ட நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறுகிறார். பையனின் வாழ்க்கை மாறியது. நன்கு படித்தான். முன்னேறினான்.

செர்ரி மரமா? போதி மரமா?: அன்று ஒருவர் தோட்டத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். ஏதோ அவசரத் தகவல் வந்தது. அதனால் அவர் காரில் ஏறிச் சென்றுவிட்டார். அவருடைய மகன் அவர் வேலையைத் தொடர்ந்தான். அதை வெட்டி இதை வெட்டி, கடைசியாக அப்பா ஆசையாக வளர்த்த செர்ரி மரத்தையும் வெட்டிவிட்டான்.  அப்பா கோபப்படுவாரே என்று அம்மா பயப்படுகிறாள்.  இதற்குள் வந்துவிட்ட அப்பா,  வெட்டியது யார்? என்று கேட்டார்.  வெட்டினேன் என்று மகன் தைரியமாகக் கூறினான். அவனை  உற்றுப் பார்த்த அப்பா, பையனை உச்சி முகர்ந்து முத்தமிட்டு,  நீ உண்மையைக் கூறினாய். போய் விளையாடு என்று அனுப்பினார். திடீரென்று தன் கணவர் இவ்வளவு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாரே என்று மனைவி வியந்தார்.  அதற்கு கணவன் மனைவியிடம்,  செர்ரி மரத்தை முட்டாள்தனமாக வெட்டியதற்குத் தண்டிக்கத்தான் நினைத்தேன். ஆனால் உண்மை பேசியவனைத் தண்டிக்கக் கூடாது என்று விட்டுவிட்டேன் என்றார்.
 
அறிவாளி மாணவன்: சில சமயம் நம்மிடத்தில் படிக்கும் மாணவன் நம்மைவிட அறிவாளியாக இருப்பான். இதைச் சில பேரால் தாங்க முடியாது. நான் ஈரோட்டில் ஓரிடத்தில் மகாபாரதம் பற்றிப் பேசிவிட்டுக் கீழே இறங்கும்போது என்னிடம் 12 வயதுப் பையன் ஒரு சிக்கலான கேள்வி கேட்டான்:  க்ஷத்திரியர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்க மாட்டார். கர்ணன் அதைச் சொல்லாமல் படிக்கப் போனான் என்று கூறினீர்கள். அதே மகாபாரதத்தில் இன்னொரு இடத்தில் பீஷ்மர், பரசுராமரிடம் வில்வித்தை கற்றார் என்று வருகிறதே. பீஷ்மரும் க்ஷத்திரியர்தானே அவர் மட்டும் எப்படிக் கற்றார்? உனக்கு உடனே பதில் வேண்டுமென்றால் சமாளிக்கும் பதில் என்னிடம் உள்ளது. ஆழமான பதில் வேண்டுமென்றால் நான் தேடித்தான் தர முடியும் என்றேன். அவன் கேட்டதற்கிணங்க,  ஓர் உறுதியை பரசுராமர் எடுக்கும் முன்னரே பீஷ்மர் அவரிடம் கற்றுக் கொண்டுவிட்டார் என்றேன். அந்தத் தம்பி மகிழ்ச்சியுடன் சென்றான்.தெரியாது என்ற விஷயத்தை ஆசிரியர்கள் ஒத்துக்கொள்ள பக்குவம் வேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டால் மாணவர்கள் ஆசிரியர்களை நிச்சயம் மதிப்பார்கள்!

பெற்றோர்களுக்கும் பொறுப்பு உண்டு!:  என் பிள்ளைக்கு எதிரில் நான் என் அறியாமையை மறைத்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். என் குழந்தை என்னை மதிக்குமா? என் மீது என் பிள்ளைக்கு மரியாதை போய்விட்டால் வாழ்நாள் முழுவதும் நான் கூறுவதை அவன் கேட்க மாட்டான். தனக்கு முன்னாலேயே அப்பா பொய் சொல்வதைப் பார்த்துவிட்டால், அந்த அப்பா மீது பிள்ளை வைத்திருக்கும் மரியாதை அதல பாதாளத்திற்குப் போய் விடும். பிறகு வாழ்நாள்  முழுவதும் அப்பாவை மதிக்க மாட்டான்.

முழு ஈடுபாடு:  ஆசிரியப் பணிக்கு வருபவர்கள் அந்தப் பணியில் முழு ஈடுபாட்டுடன் வர வேண்டும். நான் வேறு ஏதோ வேலைக்கு முயற்சி செய்கிறேன், அது கிடைக்கவில்லை, அது கிடைக்கும் வரை இருக்கிறேன் என்று சொன்னால், அந்தப் பணியை அவர்களால் நன்றாகப் பார்க்க முடியாது என்பது என்னுடைய தீர்க்கமான அபிப்பிராயம். ஒரு மாணவனை உற்சாகப்படுத்தி ஜெயிக்க வைப்பதில் சிறந்த ஊக்கமளிப்பவர் முதலில் தாய், இரண்டாவது தந்தை. அடுத்து, ஆசிரியர் இவர்களின் இடத்தை நிரப்புபவர்.

வரும்...ஆனா...வராது: ஒரு பையன் அவரிடம் வந்து தயங்கித் தயங்கி,  எனக்கு நீங்கள் கணக்கு சொல்லித் தர முடியுமா? என்று கேட்டான்.  என்று அவர் கேட்டதற்கு  கணக்கு வராது என்றான் அவன். மறுநாள் அவன் வந்தான். சுவாமிகள் அவனுடைய வகுப்புக் கணக்குகளைப் போடச் சொன்னார். அவன்  தப்பு தப்பாகப் போட்டான்.  தம்பி, தவறாகப் போடுகிறாய்? என்று சுவாமிகள் கேட்டார். சொன்னேனே சுவாமி, எனக்குக் கணக்கு வராது என்று - பையனின் பதில். சுவாமிகள் அவனுக்கு எளிய கணக்குகளாகக் கொடுத்து,  வராது என்ற எண்ணத்தை அழித்துவிட்டு  வரும் என்பதை மனதில் பதிய வைத்துப் பின் பாடத்தை ஆரம்பித்தார். மாணவனின் மனதில்  இது வராது என்ற எண்ணம் பதிந்துவிட்டால் அதை அழிக்க வேண்டியது ஆசிரியரின் வேலை. ஆகவே ஓர் ஆசிரியர்தான் உலகிலேயே மாணவருக்கு மிகச் சிறந்த உந்துதல் தருபவர்.

அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: பெற்றோர்  மிகவும் வம்பு செய்பவன் என்று கூறியே அந்த ஆசிரியரிடம் கணக்கு கற்க விடுவார்களாம். ஆசிரியர்,  மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து விடு என மாணவனை வரவழைத்து 6, 7, 8 மணி வரை கணக்குப் போட வைப்பாராம். பின்னர் 8.30 மணிக்கு சாதம் போட்டுவிட்டு,  காலை 6 மணிக்கு வா என்பாராம்.  சரியாகப் படிக்கும் வரை இவர் விடமாட்டார் என்று வேறு வழியின்றி நாங்கள் சரியாகப் படித்தோம் மேலும் என் பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளியில் 1000 மாணவர்கள் படித்தாலும், அவ்வளவு பேரையும் இனிஷியலுடன் அழைப்பார். அப்படி நினைவாற்றலுடன் தொடர்பு கொண்டதால் ஒவ்வொரு மாணவனும் தன் வாழ்க்கையில் மேன்மை அடைவதற்குக் காரணமாக இருந்தார். எனவே மேன்மேலும் நமது ஆசிரியர்கள் மிகுந்த அர்ப்பணிப்பைச் செய்கிறபோது இந்த நாடு வளமுடைய, நலமுடைய, பலமுடைய நாடாக வளரும்.

நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !