ஒரு எலுமிச்சைபழம் ரூ. 23 ஆயிரத்திற்கு ஏலம்!
திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய் நல்லூர் அருகே, முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம், 23 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இரட்டை மலைக்குன்றின் மீது அமைந்துள்ள, இக்கோவிலின் கருவறையில், வேல் மட்டும் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலில், கடந்த, 17ம் தேதி பிரம்மோற்சவம் துவங்கியது. 23ல், சுவாமி திருக்கல்யாணம், 24ல், கரகத்திருவிழா, தேரோட்டம், காவடி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, இடும்பன் பூஜை நடந்தது. அப்போது, கருவறையின் வேலில் சொருகப்பட்டிருந்த, எலுமிச்சை பழங்கள் ஏலத்தில் விடப்பட்டன. முதல் நாள் உற்சவத்தில் வந்த ஒரு பழம், 23,500 ரூபாய்க்கு ஏலம் போனது.இந்த பழத்தை வாங்கிச் சாப்பிடுவோருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என, நம்பப்படுவதால், தம்பதியினர், போட்டி போட்டு பழத்தை வாங்கி சாப்பிட்டனர். இதே போல், ஒன்பது நாள் உற்சவத்தின் போதும், வந்த எலுமிச்சை பழங்களும், 62,350 ரூபாய்க்கு, ஏலத்தில் விடப்பட்டது.