சந்திரசூடேஸ்வரர் கோவிலில் பங்குனி தெப்ப உற்சவ விழா
ஓசூர்: ஓசூர் தேர்ப்பேட்டை, சந்திரசூடேஸ்வரர் கோவிலில் நேற்று தெப்ப உற்சவம் நடந்தது. ஓசூர் தேர்ப்பேட்டை சந்திரசூடேஸ்வரர் கோவில் மலையடிவாரத்தில் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் ஆண்டுதோறும் பங்குனி விழாவில், தெப்ப உற்சவம் நடக்கும். நடப்பாண்டு, தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனால், தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடக்குமா? என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து, தன்னார்வ அமைப்புகள், பக்தர்கள் மற்றும் நகராட்சி சார்பில் குளத்தில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பினர். கடந்த, 27ம் தேதி தேர் திருவிழா நடந்தது. கடந்த, 26 மற்றும் 27ம் தேதிகளில் அடுத்தடுத்து தெப்பக்குளத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியாகினர். இதனால், தெப்ப உற்சவம் நடக்குமா? என மீண்டும் பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. நேற்று மாலை பரிஹார பூஜைகள் நடந்தன. பின் இரவு, 7.30 மணிக்கு திட்டமிட்டபடி தெப்போற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி டி.எஸ்.பி., கோபி தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். சப்-கலெக்டர் பிரவின் நாயகர், தாசில்தார் சத்திய நாராயணன் மற்றும் அதிகாரிகள், தெப்போற்சவ விழாவில் கலந்து கொண்டனர்.