பண்ணாரி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடந்தது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், பங்குனி உத்திரம் நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய்கிழமை குண்டம் விழா நடப்பது வழக்கம். இதன்படி கடந்த, 11ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கிய, குண்டம் விழாவில் கடந்த, 26ம் தேதி அதிகாலை, 3.45 மணிக்கு தலைமை பூசாரி சேகர் குண்டம் இறங்கி துவக்கி வைத்தார். இதில், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். பின், 27ம் தேதி மாவிளக்கு மற்றும் புஷ்பரதம், 29ம் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, விளக்கு பூஜையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள், விளக்கேற்றி, அம்மன் ஸ்லோகங்களை கூறி வழிபட்டனர். ஏப்ரல் ஒன்றாம் தேதி மறுபூஜையுடன் குண்டம் விழா நிறைவு பெறுகிறது.