கொளுத்தும் கோடை வெயிலில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு!
ADDED :4649 days ago
திருநெல்வேலி: கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் அங்கபிரதட்சணம், கும்பிடு நமஸ்காரம் செய்தனர். நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோயில் பங்குனித் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கோயிலில் தினமும் சிம்மாசனம், சப்பரம் வீதி உலா நடைபெற்றது. பங்குனி ஏழாம் நாளான நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம், பச்சை சாத்தி சப்பரம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலில் இருந்து தாமிரபரணி நதிக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் ஆற்றில் நீராடி பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தனர். வேம்படிஅம்மன் கோயில் தெருவில் இருந்து கோயில் வரை கொளுத்தும் வெயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கபிரதட்சணம், கும்பிடு நமஸ்காரம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.