உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகரை சுமக்கும் சீர்பாதங்களுக்கு அடையாள அட்டை

அழகரை சுமக்கும் சீர்பாதங்களுக்கு அடையாள அட்டை

புதூர்: அழகர் மலையில் இருந்து மதுரை வரும் கள்ளழகருடன் வரும் போலி சீர்பாதங்களை தடுக்க, அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அழகர்கோவில் சித்திரை திருவிழா ஏப்., 21ம் தேதி துவங்குகிறது. வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் ஏப்., 23ம் தேதி மலையில் இருந்து புறப்படுகிறார். கள்ளழகரை சீர்பாதங்கள் சுமந்து வருகின்றனர். அவர்களுடன் "டுபாக்கூர் சீர்பாதங்களும் வருகின்றனர். இவர்கள் கடைகளில் விற்கும் பூவை வாங்கி வைத்துக் கொண்டு, "அழகர் கொடுத்த பூ என பக்தர்களின் காதில் "பூச்சுற்றி பணத்தை கறந்து விடுகின்றனர்.சில சீர்பாதங்கள், போதையில் சுவாமியை சுமந்து செல்கின்றனர். திருக்கண் மண்டபங்களில் சுவாமியை இறக்கி, தூக்கும் போது வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மலைக்கு செல்லும்போது பாதி வழியிலேயே, சுவாமியை இறக்கி வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதை தவிர்க்க, பாலகிருஷ்ணன் எஸ்.பி., தலைமையில், கோயில் அதிகாரிகள் மற்றும் சீர்பாதங்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.அதில், பல்லக்கு தூக்கும் சீர்பாதங்களுக்கு அறநிலையத் துறை சார்பில் அடையாள அட்டை வழங்க எஸ்.பி., அறிவுறுத்தினார். குடிபோதையில் பல்லக்கை தூக்க சீர்பாதங்களை அனுமதிக்கக் கூடாது. திருவிழா முடிந்து சுவாமி அழகர் மலைக்கு செல்லும் வரை சீர்பாதங்கள், சுவாமியுடன் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !