தான்தோன்றீசர் கோவிலில் பாலாலயம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தான்தோன்றீசர் கோவிலில், நேற்று பாலாலயம் நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவில், தான்தோன்றீசர் கோவில் உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பல்லவர் மற்றும் பிற்கால சோழர் கால கலையம்சத்துடன் கோவில் உள்ளது. உலக உயிர்கள், ஆணவ, கன்ம, மாயை, ஆகியவற்றிலிருந்து விடுபட்டு முக்தி அடையும் வண்ணம், இறைவன் லிங்க வடிவமாக, தானே தோன்றி அருளியமையால், தான்தோன்றீசன் எனப் பெயர் ஏற்பட்டது. இக்கோவில், "உபமன்னியேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.பழமையான இக்கோவிலை சீரமைக்கவும், ராஜகோபுரம் கட்டவும், கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, 20 லட்சம் ரூபாய் மதிப்பில், திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, நேற்று காலை, பாலாலயம் நடந்தது. கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.