உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிகார நந்தி வாகனத்தில் திருவல்லீஸ்வரர் வீதியுலா!

அதிகார நந்தி வாகனத்தில் திருவல்லீஸ்வரர் வீதியுலா!

அண்ணா நகர்: திருவல்லீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவில், நேற்று நடந்த அதிகார நந்தி வாகன வீதி உலாவில், திரளான பக்தர்கள் குவிந்தனர். பாடி, திருவல்லீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழா, கடந்த, 15ம் தேதி துவங்கியது. 26ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில், வரும், 22ம் தேதி காலை தேரோட்டமும், அன்று மாலை புஷ்ப பல்லக்கும், 24ம் தேதி பிட்சாடன உற்சவமும், 25ம் தேதி மாலை, திருக்கல்யாணமும் நடக்க உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, அதிகார நந்தி வீதி உலா, நேற்று நடந்தது. அதிகார நந்தி வாகனத்தில், மலர் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட, ஜெகதாம்பிகை சமேத திருவல்லீஸ்வரர், அதிகாலை, 5:30 முதல் 8:30 மணி வரை, வடக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராஜவீதி, படவேட்டமன் கோவில் தெரு ஆகிய நான்கு வீதிகள் வழியாக, சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், திருவல்லிக்கேணி, காமகலா காமேஸ்வரி உடனாய காமேஸ்வரர் கோவிலிலும் நேற்று, அதிகார நந்தி வீதியுலா நடந்தது. இங்கு, வரும், 22ம் தேதி தேரோட்டமும், 25ம் தேதி திருக்கல்யாணமும் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !