திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் புதிய கொடி மரம்!
சென்னை: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், 60 அடி உயரமும், ஐந்தே முக்கல் அடி சுற்றளவு, தேக்கு மரத்தினாலான, கொடி மரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.திருவொற்றியூரில் உள்ள, வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருப்பணிகள் துவங்கி, நடந்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மூலவர் ஆதிபுரீஸ்வரர் சன்னிதியில் இருந்த பழுதான கொடிமரம் அகற்றப்பட்டது. தொடர்ந்து கேரள மாநிலம், தென்மலையில் இருந்து, தேக்கு மரம் கொண்டு வரப்பட்டு, 60 அடி உயரமும் ஐந்தே முக்கால் அடி சுற்றளவும் கொண்ட கொடிமரமாக வடிவமைக்கப்பட்டது. அதன் பின், இலுப்பை எண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயில் ஊற வைக்கப்பட்டது. இதையடுத்து, கொடிமரத்தை, ஆதிபுரீஸ்வரர் சன்னிதியில், நிலை நிறுத்தும் பணி நேற்று அதிகாலை துவங்கியது. கணபதி பூஜை, கலச பூஜைகளை தொடர்ந்து, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆதிபுரீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரே, ராஜகோபுரம் அருகில் தோண்டப்பட்டிருந்த குழியில், கிரேன் மூலம் கொடிமரம் தூக்கி நிறுத்தப்பட்டது.